மயிலாடுதுறை,டிச.25: மயிலாடுதுறை திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்து கொண்டு 63 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்து 31 ஆயிரத்து 819 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
மக்கள் தொடர்பு முகாமானது மக்களை சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே நடத்தப்படுகிறது. ஒரு கிராமத்திற்கு சென்று. அந்த கிராமத்தில் இருக்கக்கூடிய மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக மக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்படும். அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வகையில் இத்திட்டம் செயல்பட்டு கொண்டிருக்கின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, அரசின் பல்வேறு திட்டங்கள் பல்வேறு துறைகளின் திட்டங்கள் என்னென்ன இருக்கின்றது.
அது எவ்வாறு செயல்படுகின்றது. அதை எப்படி பெறுவது, இதை அனைத்தையும் காட்சிப்படுத்தும் விதமாகவும் வேளாண்மைத்துறை, சமூகநலத்துறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, குழந்தைகள் வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகள் திட்ட விளக்க அரங்குகளும் அமைத்துள்ளது. மனதினை எப்போதும் நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் நம் உடலும் நன்றாக இருக்கும். நாம் எப்போதும் நேர்மறையான சிந்தனையை கொண்டிருக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல், நம் உடலும் நன்றாக இருக்கும். எந்த இடத்தில் எந்த பதவியில் இருந்தாலும், வேலையில் நாம் நேர்மையாக இருக்க வேண்டும். அதற்கான உயர் பதவியும் நமக்கு கிடைக்கும்.
தமிழ்நாடு அரசானது வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை வழங்குவதற்கான ஆணைகளை பிறப்பித்துள்ளதன் அடிப்படையில், நம் மாவட்டத்திலும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு உள்ளது. அதன்மூலம் இ-பட்டா வழங்குதல், ஆதிதிராவிடர் குடியிருப்பு வீட்டுமனை, கொடுப்பதற்கான கருத்துருக்களை தயார் செய்து கொண்டிருக்கின்றோம். மிக விரைவில் இப்பணிகள் நிறைவடைந்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
இந்த மக்கள் தொடர்பு முகாமானது மாதம் ஒரு முறை ஒரு தாலுகாவில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, முடிந்தளவிற்கு மக்கள் பிரதிநிதி முன்னிலையில் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. அரசை தேடி மக்கள் என்ற நிலை மாறி. மக்களை தேடி தமிழ்நாடு அரசே முன்வந்து அவர்களின் கோரிக்கைகளை பெற்று தீர்வு காணும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இன்றைய தினம், இம்முகாமில் 63 பயனாளிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை. வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.20 லட்சத்து 31 ஆயிரத்து 819 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஷ்வரி சங்கர், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, ஆர்டிஓ விஷ்ணுபிரியா, ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் கண்ணகி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 63 பயனாளிகளுக்கு R20.31 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.