திருவனந்தபுரம் :தமிழ்நாட்டைத் தொடர்ந்து UGC புதிய விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். யுஜிசி இந்த விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஜன. 9 அன்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நேற்று கடிதம் எழுதினார். இதனைத் தொடர்ந்து நாட்டில் பாஜக அல்லாத ஆளும் மாநில முதல்வர்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையடுத்து, யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யுஜிசி வரைவு விதிகளை உடனடியாக திரும்பபெற வேண்டும் என்று தீர்மானத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்மொழிந்தார். அதில், “தனியார் துறையை சேர்ந்தவர்களை துணை வேந்தர்களாக நியமித்தால், உயர்கல்வி வணிகமயமாக வழிவகுக்கும். உயர்கல்வியில் ஜனநாயகத்தை முடக்கவே புதிய யுஜிசி விதிகள் வழிவகுக்கும். யுஜிசி விதிகள் திருத்தம் இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டைத் தொடர்ந்து UGC புதிய விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்!! appeared first on Dinakaran.