திருச்சியில் ரூ.57.45 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அரசு மாதிரி பள்ளியை முதல்வர் திறந்து வைத்தார்: தைரியமாக தேர்வை எதிர் கொள்ள மாணவர்களுக்கு அறிவுரை

19 hours ago 2

சென்னை: திருச்சி துவாக்குடியில் ரூ.57.45 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள திருச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று களஆய்வு செய்து பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட 2 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் நேற்று பிற்பகல் 12.10 மணியளவில் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் முதல்வருக்கு, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், ரகுபதி, மெய்யநாதன், எம்பிக்கள் திருச்சி சிவா, அருண் நேரு, துரை வைகோ ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், கலெக்டர் பிரதீப்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, திருச்சி சரக டிஐஜி வருண்குமார், எஸ்பி நாகரத்தினம், எம்எல்ஏக்கள் பழனியாண்டி, கதிரவன், அப்துல் சமத், சவுந்தர பாண்டியன், காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ், மேயர் அன்பழகன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து, சாலை மார்க்கமாக துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு 12.50 மணிக்கு வந்த முதல்வருக்கு, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தலைமையில் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் முதல்வருக்கு அமைச்சர்கள் நூல்கள் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி முன் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்ததுடன், ரூ.57.45 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள திருச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளிக்கான புதிய கட்டிடத்தையும், தரை மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான தனித்தனி விடுதி கட்டிடங்களையும் திறந்து வைத்தார். தொடர்ந்து பள்ளிக்குள் சென்ற முதல்வர் வகுப்பறை, எல்இடி திரைகள், ஆய்வு கூடங்களை பார்வையிட்டார். பள்ளிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை மாணவ, மாணவிகள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். அப்போது வகுப்பறையில் மாணவ, மாணவிகளுடன் பெஞ்சில் அமர்ந்து எல்இடி மெகா திரையில் ஒளிபரப்பான மாதிரி பள்ளியின் ஒரு பயணம் என்ற 10 நிமிடம் ஓடிய காணொலி காட்சியை பார்வையிட்டார்.

தொடர்ந்து, ஆசிரியர்களிடம் மாணவர்களை போட்டி தேர்வுகளில் வெற்றிபெற செய்ய தேவையான முயற்சிகளை அளிக்கும்படி அறிவுறுத்தினார். அப்போது திருச்சி துறையூர், கொப்பம்பட்டியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவிகள் கமலபிரியா, மருங்காபுரி வட்டத்தை சேர்ந்த ரம்யா ஆகியோருடன் முதல்வர் கலந்துரையாடினார். இதுகுறித்து மாணவி கமலபிரியா மற்றும் ரம்யா கூறுகையில்,‘‘ நீட் தேர்வை எதிர்கொள்ள தேவையான பாடப்பிரிவை படித்து வருகிறேன். மாதிரி பள்ளியில் நீட் தேர்வை எதிர்கொள்ள தேவையான அனைத்து பாடத்திட்டங்களும் முழுமையாகவும், எளிதாக புரியும்படியும் ஆசிரியர்கள் பயிற்றுவிக்கின்றனர். அதுமட்டுமின்றி பாடத்திட்டத்தை தாண்டி கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக ஆசியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். முதல்வர் என்னிடம் பேசும்போது, தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும், எந்த தயக்கமும் இன்றி ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டு நன்கு அறிந்து கொண்டு பயில வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

இந்த மாதிரி பள்ளியை கட்டி தந்து எங்கள் கனவை நோக்கி அழைத்துச்செல்லும் முதல்வருக்கு நன்றி,’’என்றனர்.
மாணவர் எஸ்வந்த் ராஜ் கூறுகையில்,‘‘ படிக்கும் போது ஏற்படும் சந்தேகத்தை ஆசிரியர்களிடம் அவ்வப்போது கேட்டு நன்கு தெளிவு படுத்தி கொள்ள வேண்டும் என முதல்வர் அறிவுரை வழங்கினார். மேலும் ஆய்வகத்தை பார்வையிட்டு அங்கு உள்ள உபகரணங்கள் குறித்தும் அதன் செயல்முறை குறித்தும் கேட்டறிந்தார். அதிநவீன வசதிகள் கொண்ட இந்த ஆய்வகங்களில் செய்முறையுடன் படிக்கும்போது எளிதாக புரிகிறது. எதிர்வரும் காலங்களில் போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற இது பேருதவியாக அமையும். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த முதல்வருக்கு நன்றி,’’ என்றார். பின்னர் வெளியே வந்த முதல்வர், பள்ளி முன் மாணவ, மாணவிகளுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.

 

The post திருச்சியில் ரூ.57.45 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அரசு மாதிரி பள்ளியை முதல்வர் திறந்து வைத்தார்: தைரியமாக தேர்வை எதிர் கொள்ள மாணவர்களுக்கு அறிவுரை appeared first on Dinakaran.

Read Entire Article