விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே நான்கு தலைமுறைகளாக ஒரே இடத்தில் வசிக்கும் இருளர் பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனை பட்டா, சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்டவை கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. சாதிச்சான்றிதழ் இல்லாததால் தங்களது பிள்ளைகள் 5ம் வகுப்பை தாண்டி படிக்க முடியவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகே அமைந்துள்ளது தி.எடையார் என்ற கிராமம்.
இங்குள்ள குளத்தை சுற்றி குடிசை அமைக்க இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். செங்கல் சூளைகளில் கூலி வேலை செய்து வரும் இவர்கள் நான்கு தலைமுறைகளாக இதே இடத்தில் குடியிருந்து வருகின்றனர். ஆனாலும், தங்களுக்கு தொகுப்பு வீடு, வீட்டு மனை பட்டா என எதுவும் கிடைப்பதில்லை என்கின்றனர். வறுமையிலும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க செல்லும் இவர்களுக்கு சாதிச்சான்றிதழ் பெரும் தடையாகவே தொடர்கிறது.
இதனால் இருளர் பழங்குடியின சிறுவர், சிறுமிகளின் அதிகபட்ச படிப்பே 5ம் வகுப்பு தான். சாதிச்சான்றிதழ் இல்லாததால் படிப்பை தொடர ஆசிரியர்கள் அனுமதிப்பதில்லை என வேதனையுடன் கூறுகின்றனர். சாதிச்சான்றிதழ், வீட்டு மனை பட்டா கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லை என குமுறுகின்றனர் இப்பகுதி மக்கள். தங்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடிப்படையானவை கூட கிடைப்பதில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர் இருளர் பழங்குடியின மக்கள்.
The post திருக்கோவிலூர் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் இருளர் பழங்குடியின மக்கள்: சாதிச்சான்றிதழ் இல்லாததால் படிப்பை பாதியில் கைவிடும் அவலம் appeared first on Dinakaran.