*பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
புதுச்சேரி : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மார்க்கெட்டுகளில் பன்னீர் கரும்பு, மஞ்சள், பானை உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. மேலும், பண்டிகை காரணமாக பூக்கள் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (14ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மார்கழி கடைசி நாளான இன்று போகி பண்டிகையும், தை 1ம் தேதியான நாளை (14ம் தேதி) பொங்கல் பண்டிகையும், நாளை மறுநாள் (15ம் தேதி) மாட்டு பொங்கல் பண்டிகையும், 16ம் தேதி காணும் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படவுள்ளது.
பொங்கலன்று பொதுமக்கள் வீட்டு முற்றத்திலும், கோயில்களிலும் பொங்கல் வைத்து பூஜை செய்வது வழக்கம். இதையொட்டி, கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் இருந்து பன்னீர் கரும்புகள் லாரிகள் மூலம் புதுச்சேரிக்கு நேற்று கொண்டுவரப்பட்டது.
பெரிய மார்க்கெட் மட்டுமல்லாமல் சாரம், முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம், முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், நெல்லித்தோப்பு உள்ளிட்ட மார்க்கெட்டுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கரும்புகள் கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு நேற்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு ஜோடி கரும்பு ரூ.80 முதல் முதல் ரூ.100 வரையும், 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ₹550 முதல் ரூ.800 வரையும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், பானை மற்றும் மஞ்சள் கொத்தும் விற்பனைக்கு குவிந்துள்ளன. இதில் மஞ்சள் கொத்து ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது.
மேலும், பொங்கல் வைப்பதற்கு தேவையான பச்சரிசி, வெல்லம், சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் மற்றும் காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதனால் பொங்கல் பொருட்களின் விற்பனை ஜரூராக நடைபெற்றது. தொடர்ந்து, இன்றும் மார்க்கெட்டுகளில் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று பெரிய மார்க்கெட்டில் மல்லிகை பூ 100 கிராம் ரூ.400க்கும், ஒரு கிலோ ரூ.4 ஆயிரத்துக்கும், அரும்பு 100 கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3 ஆயிரத்துக்கும், கனகாம்பரம் 100 கிராம் ரூ.80 முதல் ரூ.100 வரையும், ஒரு கிலோ ரூ.800 முதல் ரூ.1,000 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும், பன்னீர் ரோஜா 100 கிராம் ரூ.30க்கும், ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரையும், சாமந்தி 100 கிராம் ரூ.30க்கும், ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.240 வரையும், அரளி 100 கிராம் ரூ.40க்கும், ஒரு கிலோ ரூ.360க்கும், காக்கட்டான் 100 கிராம் ரூ.120க்கும், ஒரு கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,200 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் பூஜைக்காக விலை குறைவாக இருந்த சமாந்தி மற்றும் பன்னீர் ரோஜாவை அதிகமாக வாங்கி சென்றனர். பண்டிகை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு பூக்களின் விலை உயர்ந்தே காணப்படும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு குவிந்த கரும்பு, மஞ்சள் கொத்து appeared first on Dinakaran.