ஐதராபாத்,
நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்ட புஷ்பா 2 படத்தை பார்க்க சென்றார். இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோத, அங்கு புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜா (வயது 9) ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கினர். இதில், ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீதேஜா தற்போதுவரை சிகிச்சையில் உள்ளார்.
இதனையடுத்து, அல்லு அர்ஜுன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் வெளியே வந்தார். ஆனால், அல்லு அர்ஜுனின் ஜாமீனை எதிர்த்து தெலுங்கானா போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன், தன்னுடைய புகழ் மற்றும் நற்பெயரை சீர்குலைக்கும் செயல்கள் நடைபெறுவதாக வேதனை தெரிவித்தார். இந்நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண் உயிரிழந்த தகவல் அல்லு அர்ஜுனுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இருந்தும் அவர் படத்தை பார்த்து முடித்தபின்பு தியேட்டரை விட்டு வெளிவருவதாக கூறியதாகவும் தெலுங்கானா போலீசார் தெரிவித்துள்ளனர்.
தியேட்டரில் நள்ளிரவு வரை அல்லு அர்ஜுன் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு தெலுங்கானா போலீசார் தகவல் தெரிவித்துள்ளது.