சென்னை,
மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்ட தமிழர்களின் நிலப்பரப்பை "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் செய்ய கோரிக்கை வைத்து வலியுறுத்தி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, சங்கரலிங்கனாருக்கு தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும், நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம்.
அவர் காட்டிய தியாகப் பாதையில் செல்வதென்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல; ஆனால் அவருடைய தியாகத்தை மதிக்க மறுப்பவர், மறந்து திரிபவர், தமிழராகார், மனிதராகார்!" - எனப் பேரறிஞர் அண்ணா நெக்குருகப் போற்றிய விருதுநகர் சங்கரலிங்கனார் 'தமிழ்நாடு' என்ற பெயர்பெற 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்து தம் இன்னுயிரையே ஈந்த நாள் இன்று!
அந்த உத்தம தியாகிக்கு தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளது!" என்று தெரிவித்துள்ளார்.