
சென்னை,
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 'பால்கன்-9' ராக்கெட் மூலம் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்னும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம் -4' மனித விண்வெளி பயணத்திற்கான 'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்' விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. 28 மணி நேர பயணத்திற்கு பிறகு 26-ந்தேதி மாலை 4 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அது சென்றடைந்தது. இதில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் சென்றுள்ளனர்.
சுபான்ஷு சுக்லா, 'விண்வெளியில் விவசாயம்' உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். அத்துடன், பிரதமர் மோடி மற்றும் திருவனந்தபுரம், லக்னோ ஆகிய இடங்களில் உள்ள மாணவர்களிடமும் கலந்துரையாடினார். இந்தநிலையில் சுபான்ஷு சுக்லா செய்து வரும் ஆய்வுகள் மற்றும் ஓய்வு நேரத்தில் அவர் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதையும் காண்பிக்கும் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.