விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றிவிழா அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது. கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், அமைச்சர் பொன்முடி, கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது, விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில் திருமாவளவன் எம்பி பேசியதாவது:
நடிகர்கள் கட்சி துவங்கும் போதெல்லாம் விசிக தான் பாதிக்கப்படுமென தெரிவிப்பார்கள். ஆனால் யார் கட்சி தொடங்கினாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினை சீர்குலைக்க முடியாது. சினிமா கவர்ச்சியின் மூலம் இளைஞர்களை மடைமாற்றிவிட முடியாது. விசிகவை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டுமென அரசியலுக்கு வரவில்லை, சாதிய வன்கொடுமையினால் பாதிப்பிற்குள்ளாவதை தடுக்கவே களத்தில் இறங்கினோம். சாதி வெறியர்களும், மத வெறியர்களும் கொட்ட மடிக்காமல் இருக்க வேண்டும் என்று தான் அரசியல் செய்கிறோம்.
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என கேட்டுப்பெற முயற்சிப்போம். ஆனால் கூட்டணிக்காக அணி மாறுவோம் என நினைக்கக்கூடாது. திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம். சாதி வெறியர்கள், மத வெறியர்கள் பலம் பெற்றால் தாழ்த்தப்பட்ட, பட்டியல் சமூக மக்களை காப்பாற்ற முடியாது.கூட்டணி என்பது எண்ணிக்கை அடிப்படையில் இல்லை. கொள்கை சார்ந்து வழிநடத்த வேண்டும், பாதுகாக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால் எண்ணிக்கை பற்றி கவலைப்படுவதாக இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
The post திமுகவுடன் இணைந்து பயணிப்போம்; சினிமா கவர்ச்சியின் மூலம் இளைஞர்களை மடைமாற்றிவிட முடியாது: திருமாவளவன் எம்பி பேச்சு appeared first on Dinakaran.