தஞ்சை : திமுக பவள விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரில் 75 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றினார். மேலும் தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகளையம் நூலகத்தையும் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் வடக்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், “திமுகவை அழிப்பேன் என்று பல பேர் கிளம்பி இருக்கிறார்கள்; அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை.தமிழ்நாடு மக்களே தகுந்த பதிலடி கொடுப்பார்கள். நம்முடைய தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும் எப்படியாவது திமுகவில் ஒரு விரிசல் விழுந்து விடாதா என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள்.திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது திராவிட இயக்கம். பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை நிலைநிறுத்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்குடன் அனைவரும் உழைக்க வேண்டும். திமுக 7வது முறையாக ஆட்சி அமைக்க அனைவரும் உறுதி ஏற்போம். 2026ம் ஆண்டு திமுக ஆட்சி மலர அனைவரும் உழைக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post திமுகவின் தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!! appeared first on Dinakaran.