சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது;
"என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, வணக்கம். அண்மைக் காலமாக அரசியலரங்கில் நம்முடைய நிலைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் தொடர் உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. பல்வேறு ஊகங்களின் அடிப்படையில் அவை நிகழ்கின்றன. நம்மை ஆதரித்தோ எதிர்த்தோ ஊடகத்தளங்களில் பல்வேறு தரப்பினர் பேசி வருகின்றனர். அதாவது, அரசியலடிப்படையில் நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம்.
அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. நாம் ஆளுங்கட்சி திமுக தலைமையிலான "மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்" இடம் பெற்றிருப்பது ஒரு காரணம். அதுவே முதன்மையான காரணமாகும். இக்கூட்டணியைச் சிதறடிக்கத் திட்டமிடுவோர் நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர். அவர்கள் யாவரென கேள்வி எழுவது இயல்பேயாகும். குறிப்பாக, திமுக'வைப் பிடிக்காதவர்கள், திமுக கூட்டணியின் கட்டுக்கோப்பைக் கண்டு எரிச்சலடையக் கூடியவர்கள், நம்மையும் அறவே வெறுப்பவர்கள் போன்ற சக்திகள் தாம். இவர்களில் கட்சி அடையாளமில்லாத ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உள்ளனர்.
தற்போது, த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய்யோடு நாம் இணைந்து தேர்தல் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்கிற தோற்றத்தை உருவாக்கிட முனைகின்றனர். அவர் அண்மையில் அவரது மாநாட்டில் ஆற்றிய உரையில் தம்மோடு இணையவிருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்தார்.
அவரது உரையை நாம் கண்டும் காணாமல் கடந்து போயிருக்கலாம். ஆனால், "வழியில் காலை நீட்டி வம்புக்கு இழுப்பவர்கைள" எப்படி நாம் கடந்துபோவது? அவர்களுக்கு விடை சொல்லவேண்டும் என்பதைவிட, என் உயிரின் உயிராய் எனக்குள் இயங்கும் உங்களுக்கு நமது கட்சியின் நிலை குறித்து ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டியது தவிர்க்க இயலாத தேவையாகிறது.
ஆகவே தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுகவுடன், திமுக தலைமை வகிக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியுடன் கொண்டிருக்கிற அரசியல் உறவு தொடர்பாக விளக்கிட வேண்டிய நெருக்கடி எழுந்தது. அதாவது, ஏற்கனவே நாம் ஒரு வலுவான கூட்டணியில் இருக்கிறோம். அதனை நிறுவிய ஓர் உறுப்பியக்கமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளது. எனவே, நமக்கு அதனைவிட்டு வெளியேறும் தேவை ஏதுமில்லை என்பதையும் அவ்வறிக்கை மற்றும் நேர்காணல்கள் மூலம் தெளிவுப்படுத்தினோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே ஒரு கூட்டணியில் இடம் பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறபோது, நாம் இன்னொரு கூட்டணிக்குப் போவதற்கோ அல்லது புதிய கூட்டணியை உருவாக்குவதற்கோ என்ன தேவை எழுந்துள்ளது? தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம்! உறுதியாகத் தொடர்வோம்!இதனை யார் புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் தெளிவுற புரிந்துகொள்ள வேண்டும். குழப்பம் தேவையில்லை."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.