திமுக ஆட்சியில் தள்ளுபடி மானியத் திட்டத்துக்காக ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி

3 months ago 15

சென்னை: திமுக ஆட்சியில் தள்ளுபடி மானியத் திட்டத்துக்காக ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 31-ம் தேதி முடிய ரூ.760.11 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.காந்தி விளக்கம் அளித்துள்ளார். “எஞ்சிய தொகையான ரூ.250 கோடியை நடப்பாண்டில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.1,173.94 கோடி மட்டுமே” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அமைச்சர் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் 06.10.2024 தேதியிட்ட அறிக்கையில், கடந்த ஓராண்டு காலமாக நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியத் தொகையை உடனடியாக வழங்கவும், இந்த ஆண்டு விலையில்லா வேட்டி, சேலை திட்ட செயலாக்கம் குறித்தும், மாணவர்களுக்கான விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் குறித்தும் ஏற்கனவே கொள்முதல் செய்த துணிகளுக்கான தொகையினை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு உடனடியாக வழங்கிடவும். அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும், உற்பத்தி செய்து இருப்பில் உள்ள கைத்தறி துணிகளையும் தமிழக அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி அறிக்கையின் மீதான மறுப்பறிக்கைக்கான குறிப்பு பின்வருமாறு வழங்கப்படுகிறது:-

தள்ளுபடி மானியத் திட்டம்;
கைத்தறி துணி விற்பனையை ஊக்குவிக்கவும். தனியார் சந்தைகளின் போட்டியினைச் சமாளிப்பதற்காகவும் தள்ளுபடி மானியத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
1998 ஆம் ஆண்டு முதல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஆண்டு முழுவதும் கைத்தறித் துணி விற்பனையில் 20 விழுக்காடு தள்ளுபடி வழங்க அனுமதிக்கப்படுகின்றன. இது தவிர 2001 ஆம் ஆண்டு முதல் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 முதல் ஜனவரி 31 வரை 139 நாட்களுக்கு கூடுதலாக 10 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி, அதாவது 30 விழுக்காடு தள்ளுபடி மானியமாக வழங்கப்படுகிறது.

கடந்த ஆட்சியில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படாமல் விட்டுச் சென்ற நிலுவைத் தொகை ரூ.160 கோடியினை, இக்கழக அரசு 2021 ஆம் ஆண்டில், முழுவதுமாக விடுவித்துள்ளது. இவ்வரசு, 2021-2022 ஆம் ஆண்டில் ரூ.318.11 கோடியும், 2022-2023 ஆம் ஆண்டில் ரூ.200 கோடியும், 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.250 கோடியும் நிதியுதவி ஒதுக்கீடு செய்து, 852 தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸிற்கு தள்ளுபடி மானியத் தொகை விடுவித்து வழங்கியுள்ளது. 2024- 2025 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.250.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் பத்தாண்டுகளில் ரூ.1,400 கோடி வழங்கப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 2011-12 முதல் 2020-21 வரை 10 ஆண்டுகளில் ரூ.1173.94 கோடி மட்டுமே சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வரசு பொறுப்பேற்றவுடன் 2021-2022 முதல் 2024-2025 ஆம் ஆண்டு முடிய 4 ஆண்டுகளில், தள்ளுபடி மானியத் திட்டத்திற்காக ரூ.1010.11 கோடி ஒதுக்கீடு செய்து, அதில் 31.03.2024 முடிய ரூ.760.11 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்பது இவ்வரசின் சாதனையாகும். எஞ்சிய தொகையான ரூ.250 கோடி, நடப்பு 2024-25ஆம் ஆண்டில் ஒப்பளிப்பு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு. சரக கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் கோரியுள்ள தள்ளுபடி மானியக் கோரிக்கைகளை கள ஆய்வு செய்து, ஆய்வுக்குப்பின் தகுதியான கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு தள்ளுபடி மான்யத் தொகை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இலாபத்தில் செயல்படும் கைத்தறி சங்கங்கள்;
தமிழ்நாட்டில், தற்போது பதிவு செய்யப்பட்ட 1114 கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இவற்றில் 2.59 இலட்சம் நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வெளிச்சந்தை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் உற்பத்தி திட்டத்திற்குத் தேவையான துணிகளை உற்பத்தி செய்கின்றன. அது தவிர பள்ளிக் கல்வித் துறையின் இலவச சீருடை வழங்கும் திட்டம் மற்றும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் வருவாய்த் துறைக்கு தேவையான துணிகளையும் உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன. மொத்தமுள்ள 1,114 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், நாளது தேதியில், 957 கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் இலாபத்தில் இயங்கி வருகின்றன. இதிலிருந்து எதிர்க் கட்சித் தலைவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள “ஒரு சில சங்கங்கள் தவிர, அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. பல கைத்தறி சங்கங்களின் நிலைமை அடி பாதாளத்திற்குச் சென்று இயங்க முடியாத நிலையில் உள்ளன என்ற கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தவறான அவதூறாகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

துணி கொள்முதல்;
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 1114 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 114 சங்கங்களை சார்ந்த 12,831 கைத்தறி நெசவாளர்களுக்கு மட்டும் வேட்டி சேலை வழங்கும் திட்டதிதின் கீழ் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். எஞ்சிய கைத்தறி நெசவாளர்கள் கோ ஆப்டெக்ஸ் மற்றும் வெளிச்சந்தைக்கான இரகங்களின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. 2023-24-ஆம் ஆண்டில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் ரூபாய் 1241 கோடி மதிப்பிலான ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் 14 விழுக்காடு அளவிற்கு மட்டுமே அரசு திட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 1059 கோடி மதிப்பிலான, அதாவது 86 விழுக்காடு ஜவுளிகள் கோ ஆப்டெக்ஸ் மற்றும் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு, இலாபகரமாக செயல்பட்டு வருகின்றன.

2023-2024 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடரின் போது கைத்தறி மற்றும் துணிநூல் மானியக் கோரிக்கை தாக்கல் செய்த “தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் கைத்தறி இரகங்களின் தனித்தன்மை. கலை நுணுக்கம், பாரம்பரியம் மற்றும் அதன் வளமான மரபு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விற்பனையினை அதிகரிக்க கைத்தறி இரகங்களைப் பிரபலப்படுத்தும் திட்டம் நடத்தப்படும்” என அறிவிக்கப்பட்டதன்படி கோ-ஆப்டெக்ஸின் மண்டல மேலாளர்கள் / பணியாளர்கள் அனைத்து சரக துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் பங்கேற்புடன் 302 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணாக்கர்களிடையே விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு கைத்தறி இரகங்களின் விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2024-25 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 2024 முடிய உள்ள 5 மாதங்களில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் ரூ.452.12 கோடி மதிப்பிற்கு உற்பத்தி செய்து, ரூ.518.13 கோடி மதிப்பிற்கு விற்பனை மேற்கொண்டுள்ளன. கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் இருப்பிலுள்ள ஜவுளிகள் விற்பனை மேற்கொள்வதற்கு ஏதுவாக இருப்பு காலத்திற்கேற்ப 25% முதல் 55% சிறப்புக் கழிவு வழங்கி விற்பனை மேற்கொள்ள சங்கங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது. அரசு திட்டங்களின்கீழ் உற்பத்தி செய்து, சங்கங்களின் இருப்பிலுள்ள ஜவுளி இரகங்களை அரசே கொள்முதல் செய்யும் நடைமுறை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இலவச சீருடை வழங்கும் திட்டம்;
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் 05.08.2024 நாளிட்ட அறிக்கைக்கு, அரசு செய்திக் குறிப்பு எண்.018 நாள்.06.08.2024ல் விரிவான மறுப்பறிக்கை ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. அப்பதிலறிக்கையை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் படித்துப் பார்த்து அல்லது படிக்கக் கேட்டு அதிலுள்ள விபரங்களை தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இலவச சீருடை திட்டத்தினைப் பொறுத்த வரையில், நான்கு இணை சீருடைக்கான துணித் தேவையின் அடிப்படையில், நான்கு இணை சீருடை உற்பத்திக்கான உற்பத்தி திட்டம் மற்றும் அதற்கு தேவையான தரமான நூல் முழுவதுமாக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், நாளது தேதியில் மூன்று இணை சீருடைக்கு தேவையான துணிகள் முழுவதுமாக கைத்தறி துறையால் அனைத்து மாவட்ட சமூக நலத்துறையின் துணி வெட்டும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும். சமூக நலத்துறையால் சீருடைகள் தைக்கப்பட்டு பள்ளிக் கல்வித் துறையால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும், சமூக நலத்துறையின் தேவையின் அடிப்படையில் நான்காவது இணை சீருடைக்கு தேவையான 180 இலட்சம் மீட்டர் துணிகளில் 120 இலட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தி செய்து முடிக்கப்பட்டு சமூக நலத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எஞ்சிய 60 இலட்சம் மீட்டர் துணிகள் விரைவில் உற்பத்தி செய்து அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் முன் எப்போதும் இல்லாதவாறு, ஜூன் மாதத்திலேயே இரண்டு இணை சீருடைத் துணிகள் சமூக நலத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இவ்வரசின் சாதனையாகும். மேலும், கைத்தறி நெசவாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள நெசவாளர்களுக்கு நடப்பாண்டில் அவர்கள் பெற்று வரும் கூலிக்கான அகவிலைப்படியில் 10 விழுக்காடு உயர்வு, இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இரு மாதங்களுக்கு ஒருமுறை 300 அலகுகள் இலவச மின்சாரம், 60 வயது நிறைவடைந்த நெசவாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1.200/- வீதம் ஓய்வூதியம், காலஞ்சென்ற நெசவாளர்களின் குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.1.200/- வீதம் குடும்ப ஓய்வூதியம், கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ் 90 விழுக்காடு அரசு மான்யத்தில் தறிகள் மற்றும் உபகரணங்கள், குழும வளர்ச்சி திட்டத்தின் கீழ் தறிகள்.

தறி உபகரணங்கள், தறிக் கூடங்கள் மற்றும் நெசவுப் பயிற்சி உள்ளிட்ட நலத்திட்டங்கள். நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு 20 விழுக்காடு மான்யத்துடன் கூடிய கடன் வழங்குதல், ஆண்டுதோறும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ இலவச முகாம்கள் நடத்துதல் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூபாய் 4 இலட்சம் மானியத்தில் வீடுகட்டும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரான ஆணைக்கிணங்க, கைத்தறி தொழிலின் வளர்ச்சி மற்றும் நிலைப்புத்தன்மைக்காகவும் இத்தொழில் சார்ந்த நெசவாளர்களின் நலனுக்காகவும் அரசு பல்வேறு முன்னெடுப்புளை எடுத்து வருகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கான சீருடைத் திட்டம் மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியவற்றை சீரும் சிறப்புமாக எந்தவிதமான புகார்களுக்கும் இடமின்றி வழங்குவதன் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள 2,664 கைத்தறி நெசவாளர்கள், 11.124 பெடல்தறி நெசவாளர்கள் மற்றும் 41,983 விசைத்தறி நெசவாளர்கள் ஆக மொத்தம் 55,771 நெசவாளர் குடும்பங்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர் வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. இதன் மூலம் இந்த நெசவாளர் குடும்பங்கள் அனைத்தும் பயன் பெற்று வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றது முதல், வேறு எந்த அரசை விடவும், நெசவாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்பில் அதிகபட்ச அக்கறை செலுத்தி, பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செவ்வனே செயல்படுத்தி, அவர்களின் நற்பணி தொடர்ந்து பேணி பாதுகாத்து வருகிறது. ஆதலால் உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற, தேவையற்ற வதந்திகளை பரப்பும் நோக்கமுடன், அரசியல் ஆதாயத்திற்காக செய்திகளை வெளியிடுவது பொறுப்பான மூத்த அரசியல் தலைவருக்கு உரிய செயல் அல்ல எனவும் இம்மாதியான நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

The post திமுக ஆட்சியில் தள்ளுபடி மானியத் திட்டத்துக்காக ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி appeared first on Dinakaran.

Read Entire Article