
சென்னை,
2021-ம் ஆண்டு மே மாதம் இதே நாளில், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.." என்ற சொல்லை உச்சரித்து, முதல்-அமைச்சர் அரியணை ஏறினார், மு.க.ஸ்டாலின். அந்தத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மேடை பேச்சுகளில் எல்லாம், கடந்த 55 ஆண்டுகளில் தமிழ்நாடு கண்ட வளர்ச்சி, மாற்றங்களை 'திராவிட மாடல்' என்றும், அதன் நீட்சிதான் தனது ஆட்சி என்றும் கூறிவருகிறார்.
கடந்த 4 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசமாக மகளிர் விடியல் பயண திட்டம், மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை திட்டம், 'புதுமைப் பெண்' திட்டம் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை,
'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தின் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை, உயர் கல்விக்கு வழிகாட்டும் 'நான் முதல்வன்' திட்டம், வீடு தேடி சென்று சிகிச்சை அளிக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவி, விபத்தில் சிக்குபவர்களுக்கு உடனடி சிகிச்சை உதவிக்கு இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம், வீடு அற்றவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்டம் ஆகியவை முக்கியமானவை.
2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 505 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. அதில், குறிப்பிடப்படாத சில அறிவிப்புகளையும் ஆட்சிக்கு வந்த 4 ஆண்டு காலத்தில் தி.மு.க. அரசு நிறைவேற்றி இருக்கிறது. என்றாலும், பல அறிவிப்புகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் அரசின் மேல் உள்ளது.
குறிப்பாக, "தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.9 லட்சம் கோடி அளவில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும். 3 லட்சத்து 50 ஆயிரம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்" என்பது போன்ற தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற தி.மு.க.வின் அறிவிப்புகள் நிறைவேறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் எல்லாம், "தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை" என்று குற்றம்சாட்டி வருகின்றன. அது உண்மை என்று நம்பும் வகையில், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தினமும் அரங்கேறிவருகின்றன. மத்திய அரசு மற்றும் தமிழக கவர்னருடன் அரசுக்கு இருக்கும் மோதல் போக்கு பல நேரங்களில் மாநில வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று வழக்காடி வெற்றி பெற்றதை தி.மு.க. அரசு சாதனையாக கருதுகிறது. தற்போது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில், அதை மனதில் வைத்தே தி.மு.க. அரசு செயல் திட்டங்களை தீட்டிவருகிறது. புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
இது ஒருபக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் தமிழ்நாட்டின் கடன் அளவும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்வது நிதி அபாயத்தை காட்டுகிறது. 2025-26-ம் ஆண்டில் மாநில அரசு ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 96 கோடியே 76 லட்சம் அளவுக்கு கடன் பெற திட்டமிட்டிருப்பதாக பட்ஜெட்டில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள கடன் ரூ.9 லட்சத்து 29 ஆயிரத்து 959 கோடியே 30 லட்சமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் நிழல்போல் கடன் அளவும் உயர்ந்து வருவதை ஆரோக்கியமான வளர்ச்சியாக பார்க்க முடியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில்தான் தி.மு.க. அரசு இன்று (புதன்கிழமை) 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தேர்தலுக்கான காலக்கட்டம் இனி தொடங்கிவிடுவதால் மக்களை மகிழ்விக்கும் அறிவிப்புகளும் அவ்வப்போது வெளியாகும் என்று நம்பலாம்.