
திருச்சி,
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
திமுக அரசு மொழி அரசியல் செய்து வருகிறது. மும்மொழி கொள்கை பிரச்சினையில் மக்கள் ஆதரவு இல்லை என்பதால் அதனை மறைப்பதற்காக தற்போது நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு பிரச்சினையை கையில் எடுத்து உள்ளனர். ஆனால் உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதி கூட எண்ணிக்கையில் குறையாது என உறுதி அளித்து இருக்கிறார்.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நாங்கள் தொடங்கிய கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 14 லட்சம் பேர் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். மே 31-ந் தேதிக்குள் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி விடுவோம். திருச்சியில் காவல்துறை அராஜகம் மிக அதிகமாக உள்ளது. தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 3 நாட்களாக அமலாக்க துறை சோதனை நடத்தியது. ரூ.1,000 கோடி வரை முறைகேடு நடந்து இருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.