
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால் பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து லெனின்நகருக்கு நடைபாதை செல்கிறது. இங்குள்ள மக்களுக்கு அந்த நடைபாதைதான் முக்கிய வழியாக இருந்து வருகிறது.
பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் நடைபாதை வழியாக நடந்து சேரம்பாடிக்கு வந்து அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். ஆனால் மழைக்காலங்களில் நடைபாதையில் மக்கள், மாணவர்கள் நடந்து செல்ல முடியாதபடி மழைவெள்ளம் தேங்கிவிடுகிறது. இதனால் அவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
எனவே நடைபாதையில் கான்கிரீட் தளம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நடைபாதையில் கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கூடலூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஆணையாளர் அந்த பகுதிக்கு சென்று நடைபாதையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விரைவில் நடைபாதையில் கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.