தித்திக்கும் லாபம் தரும் திண்டுக்கல் திராட்சை!

3 months ago 21

திண்டுக்கல் என்றால் பிரியாணியும், பூட்டும்தான் பலருக்கு நினைவு வரும். ஆனால் திண்டுக்கல் திராட்சைக்கும் பெயர் பெற்ற ஊராக விளங்குகிறது. இங்குள்ள மண்வளம் திராட்சை சாகுபடிக்கு வரப்பிரசாதமாக விளங்குகிறது. இதனால் பல ஹெக்டேர் பரப்பளவில் இங்கு திராட்சை விவசாயம் நடக்கிறது. திண்டுக்கல் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வயல்களில் திராட்சை பந்தல்கள் நிறைந்திருக்கும். அதில் திரட்சியாக திராட்சைக்குலைகள் வளர்ந்திருக்கும். திராட்சை என்பது இங்குள்ள விவசாயிகளுக்கு பணம் தரும் அட்சய பாத்திரம். இதனால் பல தலைமுறைகளாக திராட்சை சாகுபடியில் ஈடுபடுகிற குடும்பங்கள் திண்டுக்கல்லில் நிறைந்திருக்கின்றன. இந்த வரிசையில் பல தலைமுறைகளாக திராட்சை சாகுபடியில் ஈடுபட்டு வரும் ஜாதிகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்ன முனியப்பன் என்பவரைச் சந்தித்தோம். “நான் திராட்சை சாகுபடியை இன்றைக்கு துவங்கவில்லை. பல தலைமுறைகளாக திராட்சைதான் எங்களது வாழ்வாதாரம். முழுக்க முழுக்க எனக்கு சிறிய வயதில் கிடைத்த அனுபவத்தை வைத்தே இந்த திராட்சை விவசாயத்தைத் தொடர்கிறேன். நான் தற்போது ஒன்றரை ஏக்கரில் பன்னீர் திராட்சை பயிரிட்டு இருக்கிறேன். எங்களது ஊரைச் சுற்றி 700 ஏக்கர் பரப்பளவில் திராட்சை பயிர் செய்யப்பட்டு இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் மணல் கலந்த செம்மண்ணாக இருக்கும். இது திராட்சை பயிரிட ஏதுவாக இருக்கிறது’’ தனது திராட்சை சாகுபடி அனுபவம் குறித்தும், திண்டுக்கல்லின் நிலவளம் குறித்தும் சுருக்கமாக பேசிய சின்ன முனியப்பனிடம், திராட்சை சாகுபடி விவரங்கள் குறித்து கேட்டோம். “திராட்சை சாகுபடிக்கு பந்தல் மிக அவசியம். எனக்கு ஒரு ஏக்கரில் பந்தல் அமைக்க 400 கற்கள் தேவைப்பட்டது. இந்த கற்களை சேலம், ஓசூரில் இருந்து ஒரு கல் ரூ.550 என வாங்கி வந்தேன். திராட்சை கொடிகள் படர்வதற்கான கம்பிகளை திண்டுக்கல்லில் வாங்கி வந்து கட்டி வைத்திருக்கிறோம். கம்பி, கல்லிற்கு மட்டும் நான் ரூ.2 லட்சம் வரை செலவு செய்தேன். பந்தல் அமைத்த பிறகு திராட்சையைப் பயிரிட ஆரம்பிப்பேன்.

மார்கழி மாதத்தில், முன்னர் செய்த சாகுபடியில் தரமான மகசூல் கொடுத்த கொடியில் இருந்து குச்சிகளை வெட்டி எடுத்து பாலித்தீன் கவர்களில் போட்டு 60 நாட்கள் வரை தண்ணீர் ஊற்றி வளர்ப்போம். இதுபோல் செய்து வர குச்சிகள் முளைக்கத் தொடங்கி செடியாக மாறி இருக்கும். வளர்ந்த செடிகளை எடுத்து வந்து அரை அடி ஆழத்திற்கு குழிதோண்டி எரு, புண்ணாக்கு, மக்கிய இலை, தழைகளைப் போட்டு நடவு செய்வோம். எனக்கு ஒரு ஏக்கருக்கு 400 செடிகள் தேவைப்பட்டது. அதாவது ஒரு கல்லிற்கு ஒரு செடி. ஒவ்வொரு செடிக்கும், மற்றொரு செடிக்கும் 6 அடி இடைவெளி தேவை. ஒட்டுக் கட்டுவதற்கான குச்சிகளை தேனி அரசு தோட்டக்கலைத்துறையில் இருந்து வாங்கி வந்து ஒட்டு கட்டி வைத்திருக்கிறேன். ஒரு ஒட்டுக்குச்சி ரூ.11 என்ற கணக்கில் வாங்கி வந்தேன். ஒரு செடிக்கு இரண்டு ஒட்டு குச்சிகள் வைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும். பழங்களும் சிறியதாக இல்லாமல் பெரியதாக கிடைக்கும். ஒரு செடிக்கும் மூன்று ஒட்டு கூட கட்டலாம். என்னுடைய அனுபவத்தில் மூன்று ஒட்டு கட்டி பார்த்திருக்கிறேன். ஆனால் நான் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்கவில்லை. மிகவும் சிறிய பழங்களாக கிடைத்தது. அதனால் மூன்று ஒட்டு கட்டுவதைக் கைவிட்டு விட்டேன்.

எட்டு மாதம் வரை முறையாக, மாதம் இரண்டு முறை புண்ணாக்கு கொட்டி, நீர்ப் பாய்ச்சுவோம். 10வது மாதத்தில் கொடிகளை கம்பிகளில் படரவிடுவோம். இந்த தருணத்தில் சிறிய வண்டுகள் கொடிகளைத் தாக்கக் கூடும். இந்த வண்டுகள் கொழுந்துகளைக் கடித்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். இதனால் கொடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். இந்த வண்டுகளைக் கட்டுப்படுத்த 25 கிராம் அசிப்பேட், 25 மில்லி ஆல்பா மெத்தில் ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து திராட்சைக் கொடிகளுக்கு தெளிப்போம். இதனை ஒரு குடத்தில் வைத்துகொண்டு வேப்ப இலையால் எடுத்து தெளிப்போம். இந்த மருந்தை 8 நாட்களுக்கு ஒருமுறை தெளிப்போம்.அதேபோல் கீழ் உரமாக பேக்டாம்பஸ், 1515 காம்பளக்ஸ், புண்ணாக்கு எரு ஆகியவற்றைக் கலந்து ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் கொடுப்போம். திராட்சையில் கவாத்துப்பணி மேற்கொள்வது அவசியம். ஆடி மாதத்தில் முதல் கவாத்துப் பணியை (கட்டிங்) மேற்கொள்வோம். இதிலிருந்து பதினைந்தாவது நாளில் திராட்சைக் கொடி தழைந்து வெளியே வரத் தொடங்கும். இந்த தருணத்தில் மேங்கோசிப் மருந்து கொடுப்போம். இதனால் கொடியில் அதிக பூக்கள் பூத்து நல்ல காய்கள் வரத்தொடங்கும். 30வது நாளில் பூக்களோடு சேர்ந்து இருக்கும் நச்சு இலைகளை அகற்றுவோம். திராட்சைகளில் காய்ப்பு வந்தவுடன், காய்ப்பு உதிராத வகையில் குலைகளை பூப்போல எடுத்து கம்பிகளில் கட்டுவோம். திராட்சைகளில் சாம்பல் நோய் தாக்கக்கூடும். இதனைக் கட்டுப்படுத்த துத்தம், சுண்ணாம்பு, சல்பர் ஆகியவற்றைக் கலந்து தெளிப்போம்.

இவ்வாறு செய்து வர 120வது நாளில் திராட்சை பழங்கள் அறுவடைக்குத் தயாராகிவிடும். ஒரு ஏக்கருக்கு 8 டன்னிலிருந்து 12 டன் வரை மகசூல் கிடைக்கிறது. கடந்த அறுவடையில் எனக்கு ஒரு ஏக்கருக்கு 11 டன் திராட்சை மகசூலாக கிடைத்தது. இதேபோல் வருடத்திற்கு மூன்று முறை அறுவடை செய்வோம். ஒரு முறை நடவு செய்த திராட்சைக் கொடியில் இருந்து எட்டு வருடம் வரை அறுவடை செய்யலாம். அதாவது 120 நாட்களுக்கு ஒரு அறுவடை என வருடத்திற்கு 3 அறுவடை செய்வோம். பழங்கள் பழுத்த பின்பு கத்தரிக்கோல் மூலம் வெட்டி ஒரு ட்ரேவில் போடுவோம். பைகளில் போட்டு அனுப்பி வைத்தால் திராட்சைப் பழங்கள் நசுங்கிவிடும். இதனைத் தவிர்க்கவே நாங்கள் ட்ரேவை பயன்படுத்துகிறோம்.எங்களுக்கு ஒன்றரை ஏக்கர் நிலத்தில் 17 டன் வரை மகசூல் கிடைத்தது. ஒரு கிலோ திராட்சை பழத்தை ரூ.60 என்ற கணக்கில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்வேன். இதன்மூலம் ஒரு அறுவடைக்கு ரூ.10 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் உரச்செலவு, பராமரிப்பு என்று ரூ.1 லட்சம் செலவானது. இதுபோக ஒட்டுக்குச்சி வாங்கியது, வண்டி வாடகை, ஆட்கூலி, மருந்து செலவு என ரூ.1 லட்சம் வரை செலவானது. மொத்தம் இரண்டு லட்சம் செலவுகள் போக எனக்கு ஒன்றரை ஏக்கரில் 8 லட்ச ரூபாய் லாபமாக கிடைத்தது. மழைக்காலங்களில் மகசூல் குறையக்கூடும். இதுபோக திராட்சையும் அதிக விலைக்கு விற்பனை ஆகாது. ஒரு கிலோ ரூ.20 வரை மட்டுமே விற்பனையாகும். ஆனால் மற்ற இரண்டு அறுவடையில் எப்படியும் நல்ல லாபம் பார்த்துவிடலாம். எனது தோட்டத்தில் விளையும் திராட்சைப் பழங்களை நான் மதுரை மற்றும் சென்னைக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கிறேன்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
சின்ன முனியப்பன்: 91506 93380.

The post தித்திக்கும் லாபம் தரும் திண்டுக்கல் திராட்சை! appeared first on Dinakaran.

Read Entire Article