திண்டுக்கல்லில் போலி நிறுவனம் துவங்கி ₹2.41 கோடி வரி மோசடி வேலூர் எஸ்பியிடம் மருத்துவமனை ஊழியர் புகார் ஆதார், பான் கார்டு எண்களை பயன்படுத்தி

2 days ago 1

வேலூர், ஜன.30: ஆதார் கார்டு, பான்கார்டு எண்களை பயன்படுத்தி திண்டுக்கல்லில் போலியாக நிறுவனம் தொடங்கிய மர்மநபர்கள் ₹2.41 கோடி வரி மோசடி செய்ததாக தனியார் மருத்துவமனை ஊழியர் வேலூர் எஸ்பியிடம் புகார் மனு அளித்தார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் எஸ்பி மதிவாணன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் வேலூர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்த 37 வயது வாலிபர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் நான், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். இந்நிலையில் எனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வந்தது. இதுகுறித்து வங்கிக்கு சென்று கேட்டேன். அதற்கு வங்கியினர், ‘திண்டுக்கல் மாவட்டம் வணிக வரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்த புகாரை தொடர்ந்து வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு வேலூரில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்திற்கு சென்று கேட்டுக்கொள்ளலாம்’ என்றனர். அதன்படி அங்கு சென்று கேட்டபோது எனது ஆதார் கார்டு, பான் கார்டு எண்களை மோசடியாக பயன்படுத்தி திண்டுக்கல் வீரப்பன் கோயில் தெருவில் தனியார் நிறுவனம் தொடங்கியிருப்பதாகவும், அந்நிறுவனம் சார்பில் அரசுக்கு ₹2 கோடியே 41 லட்சத்து 25 ஆயிரத்து 652 வரி பாக்கி உள்ளதால் எனது வங்கி கணக்கை முடக்கியதாகவும் தெரிவித்தனர். நான் தனியார் மருத்துவமனையில் மட்டுமே வேலை செய்கிறேன். வேறு எந்த நிறுவனத்தையும் நான் தொடங்கவில்லை. வெளியூர்களுக்கு கூட சென்றது கிடையாது. எனது மாத சம்பளத்தைக்கூட எடுக்க முடியாமல் தவிக்கிறேன். எனவே போலியாக நிறுவனம் தொடங்கி வரி மோசடி செய்த ஆசாமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திண்டுக்கல்லில் போலி நிறுவனம் துவங்கி ₹2.41 கோடி வரி மோசடி வேலூர் எஸ்பியிடம் மருத்துவமனை ஊழியர் புகார் ஆதார், பான் கார்டு எண்களை பயன்படுத்தி appeared first on Dinakaran.

Read Entire Article