திண்டுக்கல், பிப். 6: திண்டுக்கல்- பழநி சாலையில் உள்ளது செல்லாண்டியம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் தை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த ஜன.22ல் சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் மண்டகப்படிதாரர்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் நள்ளிரவு அம்மன் கரகம் ஜோடிக்கப்பட்டு, இரவு முழுவதும் வானவேடிக்கை மற்றும் கரகாட்டம் நடந்தது.
தொடர்ந்து நேற்று அதிகாலையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு மேல் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி நகர்வலம் வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். வரும் பிப்.12ம் தேதி தெப்ப உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
The post திண்டுக்கல்லில் செல்லாண்டியம்மன் கோயில் தை திருவிழா : பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.