தென்னை, மா, பலா போன்ற பணப்பயிர்களை நமது நலனுக்காக பயிரிட வேண்டும். நெல் விவசாயம் மற்றவர்கள் நலனுக்காக இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் நெல் பயிரிடுவது நமது கடமை என்றே சொல்லலாம். விவசாயத்தைப் பொறுத்தவரை எனது அப்பாவின் தியரி இதுதான் என்கிறார் திண்டுக்கல் சித்தயன்கோட்டை பகுதியைச் சேர்ந்த காதர் மீரான். நாங்கள் பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் பகுதியில் அதிக நிலம் வைத்திருப்பவர்கள் தென்னை விவசாயமும், குறைந்தளவில் நிலம் வைத்திருப்பவர்கள் நெல் விவசாயமும் செய்து வருகிறார்கள். அந்த வகையில் அப்பா காலம் வரை எங்களிடம் இருந்த 3 ஏக்கரில் நெல் விவசாயம்தான். அந்த 3 ஏக்கரை தற்போது 30 ஏக்கராக மாற்றி, 30 ஏக்கரிலும் 60 வகையான மரங்களை வளர்த்து வருகிறேன் என தனது விவசாயக் கதையை பகிர்ந்து கொள்கிறார் காதர் மீரான்.“எங்களுக்கு பூர்வீகம் இதே ஊர்தான். பல தலைமுறையாக விவசாயம்தான் தொழில். கல்லூரி படித்தவுடன் திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை. அதைத்தொடர்ந்து வெளிநாட்டில் வேலை. இப்படி பல இடங்களில் வேலை பார்த்து நானும் எனது சகோதரரும் அப்பா வைத்திருந்த 3 ஏக்கரைச் சுற்றி இருக்கிற இடங்களை எல்லாம் வாங்கி 30 ஏக்கர் ஆக்கினோம். இப்படி நிலம் வாங்கியதன் நோக்கமே சிறப்பான முறையில் விவசாயத்தை மேற்கொள்ளத்தான். அதுவும் இயற்கை முறை விவசாயம்.
என்னதான் பாரம்பரியமாக நெல் விவசாயம் செய்து வந்தாலும் பொருளாதாரத் தேவை என வரும்போது நெல்லில் இருந்து வந்த வருமானம் போதவில்லை. அதேபோல் நெல் பயிரிடுவதற்கு தேவையான அடிப்படைத் தேவைகளும் எங்களிடம் பெரிதாக இல்லை. அதனால், நெல்லைத் தொடர்ந்து பல வகையான வருமானம் தரக்கூடிய மரங்கள் வளர்ப்பதைக் கையில் எடுத்தோம்.அதன்படி தற்போது எங்கள் நிலத்தில் 2000 தென்னை மரங்கள் இருக்கின்றன. நாட்டு தென்னை மரங்களில் இருந்து நெட்டை குட்டை, குட்டை நெட்டை என அனைத்து வகையான தென்னைகளும் இருக்கின்றன. அதேபோல், நிலம் முழுவதும் ஊடுபயிராக பாக்கு மரங்கள் இருக்கின்றன. 3 வயது மரத்தில் இருந்து 10 வயது வரை உள்ள பாக்கு மரங்கள் 700 இருக்கின்றன. அதுபோக ஒரு ஹெக்டர் அளவில் கொய்யா மரங்கள். பிறகு, ஜாதிக்காய் பெருமளவில் வளர்த்து வருகிறேன்.10 ரகமான பலா மரங்கள் 500 மரங்கள் இருக்கின்றன. கூடவே பல ரகங்களில் மாமரங்களும் இருக்கின்றன. தேக்கு, மலைவேம்பு, வாகை, வேங்கை, கருங்காலி, செங்காலி, முள்ளு முருங்கை, ரம்பூட்டான் போன்ற பல மரங்கள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் மஞ்சள் இருக்கிறது. அதிலேயே இரண்டு வகையான மஞ்சள் வைத்திருக்கிறோம். நாட்டு இஞ்சி, வசம்பு, மா இஞ்சி இருக்கிறது. பின், நாட்டு அத்தி, சீம அத்தி, வெட்டிவேர் என எல்லாமே இருக்கு.
இந்த மரப் பயிர்களோடு, காய்கறிப் பயிர்களையும் விளைவிக்கிறோம். கத்தரிக்காய், மிளகாய் போன்ற வகைகள் இருக்கின்றன. அதுபோக இங்கு இருக்கிற பாக்கு மரங்களில் மிளகுக் கொடிகளை ஏத்தி விட்டிருக்கோம். இந்த வருடம் மட்டும் 50 கிலோ மிளகு அறுவடை செய்தோம். இப்படி மானாவாரி பயிர்கள், சீசன் பழங்கள் என அனைத்துமே வளர்த்து வருகிறேன்.எனது தோட்டத்தில் இருக்கிற அனைத்து வகையான மரங்களையுமே இயற்கை முறையில்தான் வளர்த்து வருகிறேன். இன்னும் சொல்லப்போனால், தோட்டத்திற்கு உள்ளே செயற்கை உரங்கள் போன்ற எந்த விதமான பொருட்களும் வராது. எங்களிடம் இருக்கிற மாடுகள், அதிலிருந்து கிடைக்கக்கூடிய கழிவுகளைக் கொண்டே இயற்கை உரங்கள் தயாரித்து பாசன நீரில் கலந்து மரங்களுக்கு கொடுத்து வருகிறோம். 30 ஏக்கரில் 60 வகையான ரகங்களில் 4000க்கும் மேலான மரங்கள் இருக்கின்றன.
இவ்வளவு பெரிய பண்ணையத்தைப் பார்த்துக்கொள்ள நிரந்தரமாகவே 4 ஆட்கள் தோட்டத்தில் இருக்கிறார்கள். செலவு எனப் பார்த்தால் மாதாமாதம் அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் இருக்கு. மற்ற வகையில், தோட்டம் உருவாக்குவதற்கு தேவையான எல்லா செலவுமே வரவுதான். 2 மாதங்களுக்கு ஒரு முறை தென்னை அறுவடை. அதற்கடுத்தபடியாக வருடத்திற்கு ஒருமுறை பாக்கு அறுவடை. சீசனுக்கு தகுந்தபடி மா, பலா, வாழை அறுவடை. இதுபோக காய்கறிகளையும் அறுவடை செய்து விற்பனை செய்து வருவதால் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்க முடிகிறது’’ என்கிறார் காதர் மீரான்.
தொடர்புக்கு:
காதர் மீரான்: 99949 80250.
30 ஏக்கரில் பல வகையான பயிர்களை விளைவித்து வரும் காதர் மீரான், தனியாக 10 ஏக்கரை குத்தகைக்கு எடுத்து அதில் தூயமல்லி ரக நெல்லைப் பயிரிட்டு வருகிறார். அதை அரிசியாக மாற்றி நேரடியாக விற்பனை செய்தும் வருகிறார்.
The post திண்டுக்கல்லில் ஒரு பிரம்மாண்ட பண்ணை! appeared first on Dinakaran.