
கோவை,
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 18 ஆயிரத்து 344 பேரும், சிறைவாசிகள் 145 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள்.
இதனையடுத்து பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் தமிழ் பாடத்தில் 135 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக அரியலூர் உள்ளது. 98.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 95.03 சதவீதம். தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களைவிட மாணவிகளே 3.54 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.47 சதவீதம் அதிகம்.
இந்த நிலையில், கோவையில், ஒரே நேரத்தில் தாய் - லாவண்யா, மகள்- அனன்யா பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளனர். இதில் மகள் 548 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். தாய் 335 எடுத்து ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். பொருளாதாரம் பாடத்தில் 32 மதிப்பெண் பெற்று 3 மதிப்பெண் குறைவால் தாய் தோல்வி அடைந்து உள்ளார்.