பைக் காணவில்லை என இளம்பெண் புகார்: லாட்ஜ்க்கு வர சொன்ன காவலர்..அடுத்த நடந்த சம்பவம்

3 hours ago 2

சென்னை,

ஆவடியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த திருமணமான இளம்பெண் கடந்த மாதம் தனது கணவரின் பைக் திருடு போனதாக ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுபற்றி குற்றப்பிரிவு போலீசில் காவலராக பணியாற்றி வரும் திருப்பத்தூரை சேர்ந்த ஹரிதாஸ் (வயது 42) உள்ளிட்ட போலீசார் விசாரித்தனர். பின்னர் ஆவடி பகுதியில் அந்த பைக் மீட்கப்பட்டு இளம்பெண்ணின் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் புகார் தெரிவித்த இளம்பெண்ணை தொடர்பு கொண்ட போலீஸ்காரர் ஹரிதாஸ் பேசினார். அப்போது அந்த இளம்பெண்ணிடம் உங்களின் பைக்கை கஷ்டப்பட்டு கண்டுபிடித்திருக்கிறோம். அதனால் என்னை பார்த்து கவனியுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு அந்தப் பெண், கவனியுங்கள் என்றால் என்ன கேட்டிருக்கிறார். உடனே காவலர் ஹரிதாஸ், 15ஆயிரம் கொடுங்கள் போதும் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு அந்தப் பெண், அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என தெரிவித்திருக்கிறார். இதையடுத்து காவலர் ஹரிதாஸ் அந்தப் பெண்ணிடம் பேரம் பேசியதாக சொல்லப்படுகிறது. பின்னர் பணம் இல்லை என்றால் பரவாயில்லை. நாம் இருவரும் உல்லாசமாக இருக்கலாம் வா என்று ஆவடியில் குறிப்பிட்ட லாட்ஜ்க்கு வருமாறு அழைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் என்னசெய்வது என்று தெரியாமல் இருந்தார். பின்னர் இது குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இளம்பெண்ணின் உறவினர்கள் செல்போனில் வீடியோவாக பதிவுசெய்தபடியே குறிப்பிட்ட விடுதிக்கு சென்று அங்கு காத்திருந்த போலீஸ்காரர் ஹரிதாசை கையும் களவுமாக பிடித்தனர். இதுபற்றி ஆவடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிதாசை கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைந்தனர். போலீஸ்காரர் ஹரிதாஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article