திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயார்

2 weeks ago 1

*கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் உறுதி

திண்டுக்கல் : குடியரசு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை ஊராட்சி, எஸ்.புதூர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலெக்டர் பூங்கொடி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கல் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024-2025ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம், கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் பிற பொருட்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

கிராமங்களுக்கு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது, அதில் எத்தனை திட்டங்கள் யல்படுத்தப்பட்டுள்ளன, எத்தனை திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

ஆரம்ப இருப்பு எவ்வளவு, எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளன, மீதி எவ்வளவு தொகை உள்ளது, இன்னும் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன என்பன போன்ற விவரங்களை இதுபோன்ற கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம். இதை அறிந்து கொள்வது பொதுமக்களின் உரிமை. மேலும், கிராமத்தின் தேவை குறித்து கோரிக்கைமனுக்கள் அளிக்கலாம்.

வறுமை ஒழிப்பு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் குறித்து, செய்திக்குறிப்புகள் வாயிலாகவும், பத்திரிகைகளின் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு கிராமத்தின் வரவு-செலவு என்ன என்பதை இதுபோன்ற கிராம சபைக் கூட்டங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

தங்களது கிராமங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. ஆகவே தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து கிராம வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி, காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழிகளை கலெக்டர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தூய்மைப் பணியாளர்களுக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.இதில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (இணை இயக்குநர்) திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, வேளாண்மை இணை இயக்குநர் பாண்டியன்,

கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) உமா, காசநோய் துணை இயக்குனர் டாக்டர் முத்துப்பாண்டியன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) நாகராஜன், திண்டுக்கல் மேற்கு தாசில்தார் ஜெயபிரகாஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லீலாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலரவன், மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

* சித்தரேவு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஆத்து£ர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருண்பூங்கொடி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சிவராஜன் வரவேற்றார்.தேவரப்பன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு பற்றாளர் முணியாண்டி தலைமை தாங்கினார்.ஊராட்சி செயலாளர் கண்ணன் வரவேற்றார்.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பச்சமலையான் கோட்டை ஊராட்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லதாமங்கேஸ்வரி முன்னிலையில் ஊராட்சி செயலர் கணேஷ்குமார் தலைமையிலும், கோட்டூரில் ஊராட்சி ஊர்நல அலுவலர்(மகளிர்) நிர்மலா முன்னிலையில் ஊராட்சி செயலர் பாண்டியராஜன் தலைமையிலும், நூத்தலாபுரத்தில் ஊராட்சி செயலர் முத்துக்குமார் தலைமையிலும், கோடாங்கிநாயக்கன்பட்டியில் ஊராட்சி செயலர் முத்துக்குமார் தலைமையிலும், ஜம்புரைக்கோட்டையில் ஊராட்சி செயலர் சிவராமன் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் முள்ளிப்பாடி ஊராட்சிக்குட்பட்ட கோடாங்கிநாயக்கன்பட்டியில் தனி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி செயலாளர் வசந்த் குமார் ஏற்பாடு செய்திருந்தார். செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில்பட்டியில் தனி அலுவலர் சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய உதவியாளர் அனிதா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செட்டிநாயகன்பட்டி ஊராட்சியை திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி செயலாளர் மாரிமுத்து, உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜ், பிற அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயார் appeared first on Dinakaran.

Read Entire Article