திண்டுக்கல்: பட்டாசு வெடிக்கும் ஆர்வத்தில் சிறுவர்கள் செய்த செயல் - வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம்

2 months ago 14

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பல்வேறு பட்டாசு வகைகளை வாங்கி வந்து, தனது வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் வைத்திருந்தார். இன்று தீபாவளி பண்டிகை முன்னிட்டு, மணிகண்டனின் மகன்கள், பட்டாசு வைத்திருந்த அறையில் இருந்து பட்டாசுகளை எடுத்து வெடித்துள்ளனர்.

இந்நிலையில், பட்டாசு வெடிக்கும் ஆர்வத்தில், எரிந்த நிலையில் இருந்த ஊதுபத்தியை பட்டாசு வைத்திருந்த அறையிலேயே சிறுவர்கள் மறந்து வைத்துவிட்டு வெளியே வந்துவிட்டனர். சிறிது நேரத்தில், ஊதுபத்தியில் இருந்து பரவிய தீ காரணமாக பட்டாசு வெடித்து சிதற ஆரம்பித்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன், தீயை அணைக்க முயன்றுள்ளார். ஆனால் தீயை அணைக்க முடியாததால், நத்தம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. அதே சமயம், வீட்டில் இருந்த அனைவரும் தக்க சமயத்தில் வெளியேறியதால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article