லண்டன்: விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 4வது சுற்றுப் போட்டியில் நேற்று, சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக், ரஷ்ய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவாவை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 4வது சுற்று மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக், ரஷ்ய வீராங்கனை ஏகதெரினா அலெக்சாண்ட்ரோவா மோதினர். முதல் செட்டில் ஏகதெரினா கடும் சவால் எழுப்பியதால் அந்த செட்டை, 7-6 (7-4) என்ற புள்ளிக் கணக்கில் பென்சிக் கைப்பற்றினார்.
தொடர்ந்து நடந்த 2வது செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் டென்ஷன் இன்றி வசப்படுத்தி வென்ற பென்சிக், காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா, செக் குடியரசு வீராங்கனை லிண்டா நோஸ்கோவா மோதினர். இருவரும் சம பலத்துடன் மோதியதால் ஆளுக்கு ஒரு செட்டை கைப்பற்றினர். தொடர்ந்து நடந்த 3வது செட்டை அபாரமாக ஆடிய அனிசிமோவா வசப்படுத்தினார். அதனால், 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்ற அனிசிமோவா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
* ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்
ஆடவர் ஒற்றையர் போட்டியில் நேற்று, செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் (38), ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டிமினார் (26) மோதினர். இப்போட்டியில் முதல் செட்டை டிமினார் எளிதில் வசப்படுத்தினார் அடுத்த இரு செட்கள் ஜோகோவிச் வசம் வந்தன. பின், 4வது செட்டையும் ஜோகோவிச் கைப்பற்றினார். அதனால், 1-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முன்னேறினார் .
The post விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் டென்சன் இன்றி வென்ற பென்சிக் காலிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.