படித்து முடித்த உடனே மாதம் 30,100 ரூபாய்: ப்ரஷ்ஷர்களுக்கு அதிக சம்பளத்தை அள்ளித்தரும் சென்னை; புதிய ஆய்வில் தகவல்

5 hours ago 1

சென்னை: படிப்பை முடித்து விட்டு புதிதாக வேலையில் சேருவோருக்கு அதிக சம்பளத்தை அள்ளித் தரும் பெருநகரங்களில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவிலான வேலைவாய்ப்பு சமூக ஊடகமான இன்டீட், பெருநகரங்களில் தற்போதைய சம்பள போக்கு, ஊழியர்களின் மனநிலை குறித்து ஆய்வு நடத்தியது. இதில் 1,311 நிறுவன உரிமையாளர்கள் உட்பட 3,842 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியாவில் சம்பள கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருப்பது தெரியவந்தது.

அதாவது, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற முக்கிய பெருநகரங்களை காட்டிலும் சென்னையில் தான் புதிதாக வேலையில் சேருபவர்களுக்கு அதிக சம்பளம் தரப்படுவதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் பணியாற்றும் 0 முதல் 2 ஆண்டு அனுபவம் கொண்ட தொடக்க நிலை ஊழியர்களுக்கு மாத சம்பளம் சராசரியாக ரூ.30,100 தரப்படுகிறது. சாப்ட்வேர் டெவலப்மென்ட் மற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக ப்ரஷ்ஷராக பணியில் சேருபவர்கள் ரூ.25,000 முதல் ரூ.30,500 வரை மாத சம்பளம் பெறுகின்றனர்.

இது, மும்பையில் ரூ.28,500 ஆகவும், டெல்லியில் ரூ.26,300 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.27,400 ஆகவும், பெங்களூருவில் ரூ.28,400 ஆகவும் உள்ளது. மேலும், 2 முதல் 5 ஆண்டு வரை அனுபவம் கொண்ட நடுத்தர நிலை ஊழியர்களுக்கு ஐதராபாத்தில் (ரூ.47,200) அதிக சம்பளம் கிடைக்கிறது. இப்பிரிவில் சென்னையில் ரூ.46,600 சம்பளம் பெறுகின்றனர். 5 முதல் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சீனியர் லெவல் ஊழியர்கள் பிரிவிலும் ஐதராபாத் ரூ.69,700 சம்பளத்துடன் முதல் இடத்தில் உள்ளது. சென்னையில் சீனியர் ஊழியர்கள் சராசரியாக ரூ.66,400 சம்பளம் பெறுகின்றனர்.

இது குறித்து இன்டீட் இந்தியாவின் விற்பனை பிரிவு தலைவர் சசிகுமார் கூறுகையில், ‘‘சம்பள விகிதம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் வாழ்க்கை செலவு மற்றும் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அதற்கேற்ற சம்பளம் கிடைக்கும் நகரங்களுக்கு இளைஞர்கள் முக்கியத்துவம் தருகின்றனர்’’ என்றார். இதன்படி டெல்லியில் பணியாற்றும் 96 சதவீதம் பேர் அங்குள்ள வாழ்க்கை செலவுக்கு ஏற்ப சம்பளம் கிடைக்கவில்லை என்கின்றனர். மும்பையில் 95 சதவீதம் பேரும், புனேவில் 94 சதவீதம் பேரும், பெங்களூருவில் 93 சதவீதம் பேரும் இதே கருத்தை தெரிவிக்கின்றனர்.

அதுவே சென்னை, அகமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் வாழ்க்கை செலவுக்கு ஏற்ப சம்பளம் கிடைப்பதாக கூறி உள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வுகள் இருந்த போதிலும், நடைமுறை மற்றும் உணர்வுப்பூர்வ காரணங்களுக்காக 10ல் 7 ஊழியர்கள் வேறு நகரங்களுக்கு மாற தயக்கம் காட்டுகின்றனர். குடும்ப சூழல், குழந்தைகளின் படிப்பு போன்ற காரணங்களாலும் பெருநகரங்களுக்கு இடையேயான புலம்பெயர்தல் குறைவாகவே உள்ளது. சம்பள விவகாரத்தில் தகவல் தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்துகிறது. இத்துறையில் புதிதாக வேலைக்கு சேர்பவர்களின் சராசரி சம்பளம் ரூ.28,600 ஆக உள்ளது. உற்பத்தி துறையில் ரூ.28,300, தொலைதொடர்பு ரூ.28,100, இ-காமர்ஸ் ரூ.27,700, லாஜிஸ்டிக்ஸ் ரூ.27,600, சுகாதாரம் மற்றும் மருந்து ரூ.27,400, ஆட்டோமொபைல் ரூ.27,000 ஆரம்ப சம்பளமாக உள்ளது.

பெருநகரங்களில் சம்பள நிலை
நகரங்கள் 0-2 ஆண்டு
அனுபவம் 2-5 ஆண்டு
அனுபவம் 5-8 ஆண்டு
அனுபவம்
சென்னை ரூ.30,100 ரூ.46,600 ரூ.66,400
ஐதராபாத் ரூ.28,500 ரூ.47,200 ரூ.69,700
அகமதாபாத் ரூ.27,300 ரூ.46,200 ரூ.69,00
பெங்களூரு ரூ.28,400 ரூ.46,000 ரூ.67,100
சண்டிகர் ரூ.26,300 ரூ.45,500 ரூ.68,400
மும்பை ரூ.28,500 ரூ.45,700 ரூ.66,400
கொல்கத்தா ரூ.27,400 ரூ.44,900 ரூ.66,000
புனே ரூ.27,200 ரூ.44,600 ரூ.65,000
டெல்லி ரூ.26,300 ரூ.43,600 ரூ.64,400

The post படித்து முடித்த உடனே மாதம் 30,100 ரூபாய்: ப்ரஷ்ஷர்களுக்கு அதிக சம்பளத்தை அள்ளித்தரும் சென்னை; புதிய ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article