திருமங்கலம், பிப். 6: கள்ளிக்குடி அருகே, மாடுகளை ஏற்றி சென்ற லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஏழு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. திருச்சியில் இருந்து 33 மாடுகளை ஏற்றிக்கொண்டு, விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு நேற்று காலை லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை சாத்தூரைச் சேர்ந்த டிரைவர் லட்சுமிகாந்தன் என்பவர் ஓட்டிச் சென்றார். திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடியை அடுத்த நல்லமநாயக்கன்பட்டி பிரிவு அருகே சென்ற போது, லாரியின் முன் பக்க டயர்களில் ஒன்று வெடித்து. இதினால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் லாரியில் இருந்த கன்று குட்டிகள், மாடுகள் படுகாயமடைந்தன. அவற்றில் ஏழு மாடுகள்உயிருக்கு போராடின.
இதனை பார்த்து பதற்றமடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள் லாரிகளில் சிக்கிய மாடுகளை மாடுகளை மீட்கும் பணிகளை தொடங்கினர். இதற்கிடையே அங்கு வந்த கள்ளிக்குடி போலீசார் கால்நடைத்துறை மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்து காயமடைந்த சில மாடுகளை காப்பாற்றினர். இருப்பினும் பலத்த காயமடைந்த ஏழு மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகின. உடனடியாக உயிரிழந்த மாடுகளை கால்நடை மருத்துவர்கள் அங்கேயே உடற்கூறாய்வு செய்தனர். பின்னர் அந்த மாடுகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
மீதமுள்ள மாடுகள் விருதுநகரில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. லாரியில் அளவுக்கு அதிகமான மாடுகளை ஏற்றி வந்த லட்சுமிகாந்தன் மீது, கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கால்நடைகளை லாரியில் ஏற்றிச்செல்வதற்கான வழிமுறைகளை சமீபத்தில் உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதனை கருத்தில் கொள்ளாமல் அளவுக்கு அதிகமாக ஒரே லாரியில் 33 மாடுகளை ஏற்றியதால் பாரம் தாங்காமல் டயர் வெடித்து கவிழ்ந்து என, போலீசார் தெரிவித்தனர்.
The post திடீரென டயர் வெடித்து லாரி கவிழ்ந்து 7 மாடுகள் பலி appeared first on Dinakaran.