திக்குத் தெரியாமல் தவிக்கும் தேனிக்காரரின் நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2 months ago 11

‘‘கட்டுக்கோப்பா இருந்த மெடல் மாவட்ட இலைக்கட்சியில இப்ப தடி எடுத்தவரெல்லாம் தண்டல்காரர் ஆனதைப் போல நிலைமை மாறியுள்ளதா சொல்றாங்களே.. உண்மையா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. மெடல் மாவட்டத்துல நிலவுற கோஷ்டி பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், யார் சொல்லி யார் கேட்பது என்ற நிலை நிலவி வருவதாக தொண்டர்கள் புலம்புகின்றனர். கிழக்கு மற்றும் மேற்கு என மாவட்டம் இரண்டாக இருந்தாலும், நிர்வாகிகள் அனைவரும் மாஜி பால்வள மந்திரியின் ஆதரவாளர்களாகத் தான் இருந்தார்கள். இவரால் பதவிக்கு வந்த பெரும்பாலானோர், தற்போது அவருக்கு எதிராகவே கம்பு சுற்றி வருகிறார்கள். இதனால் பால்வளத்தின் மீது சேலத்துக்காரர் தரப்பு கடும் கோபத்தில் இருக்கிறதாம். கிழக்கு மாவட்டத்தில் உள்ள இவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக மாற்றப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமனம் நடந்து வருகிறது. புதிய நிர்வாகிகள் மற்றும் ஏற்கனவே பதவியில் உள்ள நிர்வாகிகள் பெயர்கள் மற்றும் படங்களை அச்சிடுவதில் கடும் போட்டி நிலவுகிறதாம். சமீபத்தில் முடிந்த கள ஆய்வு கூட்டத்தின்போது இது பலமாக எதிரொலித்துள்ளது. அதில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் பெயர்கள் மட்டும் தான் கூட்டத்தில் வாசிக்கப்பட்டதாம். கட்சி கூட்டங்களில் முன் வரிசையில் இடம் பெற வேண்டியவர்கள் மற்றும் புறக்கணிக்க வேண்டியவர்கள் என பட்டியல் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போகிறதாம். இப்படியே நிலைமை நீடித்தால், தேர்தலுக்குள் பெரும் சலசலப்பை கட்சி சந்திக்க வேண்டிவரும் என கட்சியினர் இப்போதே புலம்பத் தொடங்கி விட்டார்கள்….’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மன்னர் மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ் நிர்வாகிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கிறார்களாமே.. ஏன்..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை முற்றியவுடன் ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், ஓபிஎஸ் தனியாக நிர்வாகிகள் நியமனத்தில் ஈடுபட்டார். அதேபோல் மன்னர் மாவட்டத்திலும் நிர்வாகிகள் நியமனம் செய்தார். செய்ததில் இருந்து முக்கிய நிர்வாகிகள் யாரும் ஓபிஎஸ் பக்கம் வரவில்லை. இந்த அதிருப்தியில் இருந்த நிர்வாகிகள் திருச்சியில் நடத்தும் கூட்டத்திற்கு ஆட்களை சேர்க்க முயற்சி செய்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகி, ஒன்றிய நிர்வாகிகளிடம் ஆட்களை அழைத்துவர சொன்னவுடன் ஏங்க எங்களிடம் போஸ்டர் அடிக்க கூட காசு இல்லை. நாங்க யாரை கூப்பிடுவது என்று சொன்னவுடன் நான் ஏற்பாடு செய்றேன்னு சொல்லியுள்ளனர் மாவட்ட நிர்வாகிகள். ஆனால் இதுவரை எந்த சுவீட் பாக்ஸ்சும் வரவில்லை. இதனால் ஓபிஎஸ் நிர்வாகிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளனர். சமீபத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திற்கு சென்றவர்கள் இவர்களை நம்பினால் எதுவும் செய்யமாட்டார்கள். பேசிக்கோண்டே தான் இருப்பார்கள். தேர்தல் நெருங்கி கொண்டு வருகிறது. ஆனால் இது வரை பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள் என்று புலம்பியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காக்கி சேதி ஏதுமுண்டா..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடைக்கோடி மாவட்டத்தில் மலையோர பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான பார் அமைத்து மதுபான விற்பனைக்கு சிலர் முயற்சி செய்கிறார்களாம். இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம். ஆனால் எதிர்ப்பையும் மீறி பாரினை எப்படியாவது திறந்துவிட வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்கள் முயன்று வருகிறார்களாம். அதற்காக கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகளை எல்லாம் ஓய்வு பெற்ற காக்கி உயர் அதிகாரி ஒருவரது பெயரை பயன்படுத்தி அவருக்கு வேண்டப்பட்டவர்கள் என்று மிரட்டாமல் மிரட்டி வருகிறார்களாம். இப்போது விஷயம் மாவட்ட காக்கி உயர் அதிகாரி அலுவலகம் வரை சென்றுள்ளதாம். இவையெல்லாம் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிக்கு தெரியுமா என்பது கிராம வாசிகளின் கேள்வியாக உள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புதுச்சேரியில் காக்கிகள் பணியிட மாற்றத்திற்கு புல்லட்சாமி தயவை எதிர்ப்பாத்து காத்துகிடக்கிறார்களாமே…’’ என்றார், பீட்டர் மாமா. புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பாகவே அந்தந்த சரக எஸ்.பி.,க்களை மாற்றுவது வழக்கம். இதனை சாதகமாக பயன்படுத்தி கலெக்ஷன் அதிகம் வரும் சரகத்தை கைப்பற்ற எஸ்பிக்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறதாம். சில எஸ்.பி.,க்கள் முதல்வர் சட்டமன்றம் வரும்போது, அவரை பார்த்து விரைப்பாக சல்யூட் அடிக்கிறார்களாம். இவர்களுக்கான பணியிட மாறுதல் உத்தரவு தலைமை செயலகத்தில் இருந்து பிறப்பிக்கப்படும். ஆனால் நிர்வாகி, எஸ்.பி.,க்கள் இடமாற்ற விவகாரத்தில் தனக்கு தெரியாமல் உத்தரவு போடக்கூடாது என டி.ஜி.பி.,க்கு கொக்கி போட்டிருக்கிறாராம். அரசியல்வாதிகள் பரிந்துரையின்பேரில் டிரான்ஸ்பர் இருக்க கூடாது என்பதற்குதானாம். ஆனால் இது தெரியாமல் எஸ்.பி.,க்கள் புல்லட்சாமி, உள்துறை அமைச்சர் சிவமானவரிடம் இடமாற்றம் கேட்டு நச்சரித்து வருகிறார்களாம். ஆனால் டிரான்ஸ்பர் விவகாரத்தில் நிர்வாகியின் கிடுக்கிப்பிடியை வெளியே சொல்ல முடியாமல் ஆட்சியாளர்கள் உள்ளுக்குள் கதறுகிறார்களாம், என்றார் விக்கியானந்தா.

The post திக்குத் தெரியாமல் தவிக்கும் தேனிக்காரரின் நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article