தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வுக்கு இடம் உண்டா?: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில்

7 hours ago 2

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 ஆங்கில பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நீங்கள் பெற்ற சட்ட வெற்றியின் அரசியல் முக்கியத்துவம் என்ன?

பதில்:- மாநில உரிமைகளுக்கான சட்ட போராட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு என்பது ஒரு மைல்கல். நியமன பதவியில் இருக்கும் கவர்னர் என்பவர் சட்டமன்றத்தில் நிறைவேறிய மசோதாவுக்கு ஒப்புதலளிக்க கடமைப்பட்டவர் என்பதை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. நமது அரசமைப்பு சட்டத்தின் மாண்பை காப்பாற்றியிருக்கும் அம்சமாகும்.

கேள்வி:- கவர்னர் ஆர்.என். ரவி உடனான உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

பதில்:- தனிப்பட்ட முறையில் கவர்னர், பிரதமர் என யாருடனும் எங்களுக்கு நேரடி பகையில்லை. அவரவர் பதவிக்குரிய மதிப்பை உரிய முறையில் அளித்து வருகிறோம். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து பா.ஜ.க. ஆட்சி செய்யாத - ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாத மாநிலங்களில் கவர்னர்களை கொண்டு இணை அரசாங்கம் நடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கவர்னர் மாளிகையும் பல்கலைக்கழகங்களும் ஜனநாயகம் வேட்டையாடப்படும் இடங்களாக மாறியிருக்கின்றன. தமிழ்நாட்டின் கவர்னர் ஆர்.என். ரவி திருந்த மாட்டார் என்பதை ஒரு பொதுவிழாவிலேயே தெரிவித்திருக்கிறேன்.

கேள்வி:- மத்திய அரசின் அதிகாரத்திற்கு எதிரான தென் மாநிலங்களின் கூட்டு எதிர்ப்பை நீங்கள் வழிநடத்துகிறீர்கள். இது தேர்தல் ஆதாயங்களாக மாறும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்:- மாநில உரிமைக்கான குரலை 1957 முதலே தி.மு.க. நாடாளுமன்றத்தில் எழுப்பி வருகிறது. 1962-ல் மாநிலங்களவையில் அதனை அண்ணா எழுப்பினார். 1969-ல் முதல்-அமைச்சராக கருணாநிதி தனது முதல் டெல்லி பயணத்தின்போதே மாநில உரிமைகளை நிலைநாட்ட, குழு அமைக்கப்படும் என்றார். ராஜமன்னார் குழுவின் அறிக்கையை பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சி தீர்மானத்தை அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் அனுப்பிவைத்தார். தி.மு.க முன்னெடுத்த அந்த குரலைத்தான் பிற மாநிலங்களும் எதிரொலித்தன. இப்போதும் மாநில உரிமைகளுக்கான நடவடிக்கைகளை தி.மு.க. மேற்கொள்கிறது. இது வெறும் தேர்தல் ஆதாயத்திற்கானதல்ல; நாட்டின் ஒருமைப்பாடு சிதையாமல் இருப்பதற்கான பாதுகாப்பு.

கேள்வி:- பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் அல்லாத பிற மாநிலங்களில் நிதி பகிர்வு தேக்கமடைந்துள்ளதாக தமிழ்நாடு மற்றும் பிற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கூறுகின்றன? இந்த பிரச்சினையில் நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் ஒரு சாத்தியமான தீர்வாக இருக்குமா?

பதில்:- இந்தி மொழி திணிப்பை ஏற்காததால் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ் மத்திய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தரவில்லை. தமிழ்நாட்டை போலவே கேரளா, மேற்கு வங்காளம் போன்ற பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் வஞ்சிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கூட பேரிடர் நிவாரண நிதியை உரிய முறையில் வழங்கவில்லை. 15-வது நிதிக்குழு பரிந்துரைத்த அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடோ, வரிப்பகிர்வோ மத்திய பா.ஜ.க. அரசால் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் நலன் சார்ந்த சாதகமான எந்த தீர்வுக்கும் பா.ஜ.க. தயாராக இல்லை என்பதையே இவை காட்டுகின்றன.

கேள்வி:- உங்கள் நான்கு ஆண்டுகால ஆட்சியில், நீங்கள் என்ன சாதித்தீர்கள்?

பதில்:- தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும், மாநிலத்தின் அமைதித்தன்மைக்கும் எவ்வித இடையூறுமில்லாத நிலையில், இடையூறு செய்ய நினைக்கும் அரசியல் சக்திகளின் சதிவேலைகளை கண்டறிந்து முறியடித்தும், மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறோம்.

கேள்வி:- தற்போதைய பதவிக்காலத்தில் 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தி.மு.க. அரசிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்?

பதில்:- 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை மாற்றி, இன்று 9.69 சதவீத வளர்ச்சியுடன் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை தலை நிமிர்ந்து நடைபோட வைத்திருக்கிறோம். 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற சமத்துவ – சமூகநீதி லட்சியத்தோடு, ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை நிர்ணயித்து கொண்டு கடமையாற்றி கொண்டிருக்கிறோம்.

கேள்வி:- 2026 சட்டமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக 2-வது முறையாக ஆட்சியை பிடிக்க தி.மு.க எவ்வாறு தயாராகி வருகிறது?

பதில்:- தி.மு.க. தன் கொள்கை கூட்டணியுடன் வலிமையாக இருக்கிறது. அந்த வலிமையை எதிர்த்து வெற்றி பெற முடியாதவர்கள், தி.மு.க.வை வீழ்த்தலாம் என்று எந்தவித கொள்கையும் இல்லாமல் கூட்டணி சேர்ந்திருப்பதை மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். தி.மு.க.வின் கொள்கை கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருப்பதாலும், திராவிட மாடல் அரசின் சாதனைகள் அ.தி.மு.க.வினர் உள்பட தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உண்மையான பலனை தந்திருப்பதாலும் 2026-ல் மீண்டும் வெற்றி பெறும் அளவிற்கு தி.மு.க.வும்-அதன் கூட்டணி கட்சிகளும் வலிமையாக இருக்கின்றன. எதிரணியினர்தான் தங்களுக்கு சவால் யார் என்பதை தேட வேண்டும்.

கேள்வி:- பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலை வைத்துதான் தி.மு.க. தேர்தல்களில் வெற்றி பெறுகிறது என்ற ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறது. மாநில சுயாட்சி போன்ற விவகாரங்களை எடுத்து தங்கள் ஆட்சியின் மீது உள்ள அதிருப்தியை மறைக்க பார்க்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளதே?

பதில்:- தி.மு.க. என்பது பவளவிழாவை நிறைவு செய்துள்ள இயக்கம். இந்த இயக்கம், தமிழரின் இன, மான, மொழி உணர்வுகளுக்கு இழுக்கு ஏற்படும்போதெல்லாம், அச்சுறுத்தல் ஏற்படும்போதெல்லாம் அதனை எதிர்த்து போராடுகிறோம். இந்த எதிர்ப்புகள் எல்லாம் பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்ப்பாக இருப்பதால் நீங்கள் அப்படி நினைக்கலாம். ஆனால், பா.ஜ.க.வும் அதன் கொள்கைகளும் தேர்தலை கடந்து எதிர்க்கப்பட வேண்டியவை. தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்மை விளைவிக்கின்ற அரசியலைத்தான் தி.மு.க. என்றும் செய்யும். அதற்கு தடையாக உள்ளவர்களுக்கு எதிராக போராடும்.

கேள்வி:- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருந்தாலும் தேர்தல் களம் இப்பொழுதே குடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. 19 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- ஆட்சி பொறுப்பில் இருந்தபோது, தங்களுடைய பதவியை காப்பாற்றி கொள்ள தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்து, பா.ஜ.க.வின் பாதங்களை தாங்கத்தொடங்கிய அ.தி.மு.க. தொடர்ந்து பா.ஜ.க.வின் கைப்பாவையாகத்தான் இருந்து வருகிறது. இதில் பிரிவு – உறவு என்பது மக்களை ஏமாற்ற அவர்கள் ஆடிய நாடகம்தான் என்பதை மக்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். இவர்கள் நேரடி கூட்டணியாக சேர்ந்து நின்றாலும், கள்ளக்கூட்டணியாக தனிதனியாக நின்றாலும் இவர்களால் தமிழ்நாட்டுக்கு எந்தவித நன்மையும் இல்லை. ஏற்கனவே இது தோல்வி கூட்டணிதான். இந்த முறையும் மக்கள் நிராகரிப்பார்கள்.

கேள்வி:- சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரையில் அ.இ.அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தங்கள் கூட்டணியை பலப்படுத்தப்போவதாகவும் மேலும் சில கட்சிகள் தங்கள் அணியில் இணையும் என்று கூறுகிறார்கள். அப்படி நடந்தால், தேசிய ஜனநாயக கூட்டணி உங்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்பதை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா?

பதில்:- தங்களது கூட்டணிக்கும் கொள்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமியே கூறியிருக்கிறார். பதற்றத்தில் கொள்கை அற்ற அவர்கள்தான் ஒன்றிணைகிறார்கள். எங்களுக்கு எந்த பதற்றமும் இல்லை. மக்கள் தி.மு.க.வின் பக்கம் இருக்கிறார்கள்.

கேள்வி:- தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த முறை 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்குடன் தேர்தலை சந்திக்கவிருக்கிறீர்கள். இதே கூட்டணி நீடிக்குமா அல்லது பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. போன்ற காட்சிகள் இக்கூட்டணியில் இணைய வாய்ப்பிருக்கிறதா?

பதில்:- தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது. கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது. 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற சமத்துவ - சமூகநீதிப் பாதையில் சிறப்பாக செயல்படுகிறது. அதனால்தான் தமிழ்நாட்டு மக்கள் எங்கள் கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வெற்றியை வழங்குகின்றனர். இந்த வெற்றி பயணம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article