
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ந்தேதி 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார். தொடர்ந்து நாடாளுமன்றத்தில், பல்வேறு மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
பின்னர் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நடந்து முடிந்த இரு அவைகளும், மார்ச் 10-ந்தேதி (இன்று) வரை ஒத்தி வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, 24 நாட்கள் இடைவெளிக்கு பின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது.
காலை 11 மணிக்கு மக்களவை கூடிய நிலையில், தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி மறுக்கப்படுவதாக தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பினார். புதிய கல்விக்கொள்கையை பின்பற்றாததால் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய கல்வி நிதியை தர மத்திய அரசு மறுப்பதாக அவர் கூறினார்.
அப்போது பேசிய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், "தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக தவறாக பரப்புரை செய்யப்படுகிறது. தமிழக மாணவர்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தையும் மாநில அரசு பாழடிக்கிறது" என்றார்.
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானின் பதிலை ஏற்க மறுத்து தி.மு.க. எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம் எழுப்பினர். இதனால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.