சாம்பியன்ஸ் டிராபி: விராட் இல்லை.. இந்த தொடரின் சைலண்ட் ஹீரோ அவர்தான் - ரோகித் பாராட்டு

3 hours ago 1

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆடட்டத்தின் முக்கியமான தருணத்தில் இந்திய அணி கில், விராட், ரோகித் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்ததால் நெருக்கடிக்கு உள்ளானது. அங்கிருந்து போட்டியை எடுத்து செல்ல யாராவது ஒரு பேட்ஸ்மேன் பொறுப்புடன் விளையாட வேண்டும் நிலை ஏற்பட்டது. அந்த வேலையை ஸ்ரேயாஸ் ஐயர் கச்சிதமாக செய்து முடித்தார். இந்த ஆட்டம் மட்டுமின்றி தொடர் முழுவதுமே அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நடப்பு தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரராக சாதனை படைத்தார்.

இந்நிலையில் பேட்டிங் துறையில் தாம், விராட் கோலி போன்றவர்களை விட ஸ்ரேயாஸ் ஐயர்தான் மிடில் ஆர்டரில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியதாக ரோகித் சர்மா பாராட்டியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "சூழ்நிலை கடினமாக இருக்கும் என்பதை தெரிந்து நாங்கள் அதற்கு நன்றாக எங்களை உட்படுத்திக் கொண்டோம். வங்காளதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் இலக்கு வெறும் 230 மட்டுமே. ஆனால் பிட்ச் ஸ்லோவாக இருந்ததால் வெற்றி பெறுவதற்கு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. அது போன்ற சூழ்நிலையில் சைலன்ட் ஹீரோ ஸ்ரேயாஸ் ஐயர் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியதை மறக்காதீர்கள்.

மிடில் ஆர்டரில் அவர் எங்களுக்கு மிக மிக முக்கியமானவராக செயல்பட்டார். தன்னுடன் எதிர்புறம் இருக்கும் பேட்ஸ்மேனுடன் சேர்ந்து அவர் பார்ட்னர்ஷிப்புகளை அமைத்தார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதி போட்டியில் விராட் கோலியுடன் இணைந்து அவர் அமைத்த பார்ட்னர்ஷிப் மிக மிக முக்கியமானது. லீக் சுற்றில் பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக மட்டுமின்றி இறுதிப் போட்டியிலும் நாங்கள் 3 விக்கெட்டுகளை இழந்தோம்.

அப்போது 50 - 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் எங்களுக்கு தேவைப்பட்டது. அதை ஸ்ரேயாஸ் செய்தார். அந்த வகையில் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல் வேகமாக உட்படுத்திக் கொண்டு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. அதனால் எனது வேலையும் இருப்பதை விட குறைவாகவே இருக்கிறது" என்று கூறினார்.

Read Entire Article