
இந்திப் பட இயக்குநரான விவேக் அக்னிஹோத்ரி, முன்னாள் பிரதமர் லால் பஹதூர் சாஸ்திரியின் மரணத்தை மையமாகக் கொண்டு 'த தாஷ்கண்ட் பைல்ஸ்' என்ற படத்தை 2019-ம் ஆண்டு இயக்கினார். இதையடுத்து அவர் இயக்கி, 2022-ம் ஆண்டு வெளியான 'தி காஷ்மீர் பைல்ஸ்' வரவேற்பைப் பெற்றது. நாடு முழுவதும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பின்னர் 'த வேக்ஸின் வார்' என்ற படத்தைக் கடந்த ஆண்டு இயக்கினார். .
இப்போது 'தி டெல்லி பைல்ஸ்: த பெங்கால் சாப்டர்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் தலைப்பை, 'தி பெங்கால் பைல்ஸ்: ரைட் டூ லைப்' என்று சமீபத்தில் மாற்றியுள்ளார்.
இந்நிலையில், திரைப்படத்தின் புதிய டீசரை அதன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது யூடியூப் பக்கங்களில் வெளியிட்டுள்ளன. இந்த டீசரில், 'உங்களை காஷ்மீர் காயப்படுத்தியிருந்தால், பெங்கால் பயமுறுத்தும்' எனும் வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மிதுன் சக்கரவத்தி, தர்ஷன் குமார், அனுபம் கெர் மற்றும் பல்லவி ஜோஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம், 1946ம் ஆண்டு வங்காளப் பகுதிகளில் நடைபெற்ற வன்முறைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.