
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்ட கல்லூரியில் 24 வயது மாணவி ஒருவர், கல்லூரி வளாகத்திலேயே முன்னாள் மாணவர் மற்றும் ஆளுங்கட்சி அரசியல் பிரமுகரான மனோஜித் மிஷ்ரா (வயது 32), முதலாம் ஆண்டு மாணவர் ஜைப் அகமது (வயது 19) மற்றும் மற்றொரு மாணவர் பிரமீத் முகர்ஜி (வயது 20) ஆகியோரால் கடுமையாக தாக்கப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைத்து, 31 வயது மருத்துவ பயிற்சி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சட்ட கல்லூரியில் மாணவி பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.
இதுபற்றி அந்த மாணவி அளித்த புகாரில், இரவு 7.30 மணியில் இருந்து 10.50 மணி வரை 4 மணிநேரத்திற்கும் கூடுதலாக கல்லூரியில் வைத்து, தாக்குதல் மற்றும் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது. அப்போது, அந்த மாணவியை ஆக்கி மட்டையால் அடித்தும், பலாத்கார சம்பவம் தொடர்பான வீடியோவை மொபைல் போனில் எடுத்தும், அதனை ஆன்லைனில் வெளியிட்டு விடுவோம் என 3 பேரும் அச்சுறுத்தியும் மற்றும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட 3 நபர்களின் மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டு, அவற்றை போலீசார் தடய அறிவியல் ஆய்வுக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஷ்ரா, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராவார். அக்கட்சியின் மாணவரணியின் செயலாளராகவும் உள்ளார்.
நடந்த விசயங்களை அவர் ஒப்பு கொண்டார் என போலீசார் தெரிவித்தனர். அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 8-ந்தேதி வரை போலீஸ் காவலை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், கல்லூரியின் பாதுகாவலரான பினாகி பானர்ஜி (வயது 55) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பலாத்கார சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு, இதே சட்ட கல்லூரி வளாகத்தில் ஆளும் கட்சியின் கூட்டம் ஒன்றும் நடந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.
இதுபற்றி போலீசார் கூறும்போது, சட்ட கல்லூரி மாணவி கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலேயே, முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஷ்ரா, அவரை கொடூர பலாத்காரம் செய்ய சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது முன்பே திட்டமிடப்பட்ட செயல் என கூறினர். இந்த பாலியல் வன்கொடுமையை மேற்கொள்வதற்காக 3 பேரும் பல நாட்களாக திட்டமிட்டு வந்துள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
இந்த வழக்கை 9 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரித்து வந்தது. பின்பு, அது துப்பறியும் துறைக்கு மாற்றப்பட்டு விட்டது.
இவர்கள் 3 பேரும் இதே கல்லூரியில் வேறு சில மாணவிகளிடமும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளனர் என்பது எஸ்.ஐ.டி. விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்து கொண்டு, அவர்களை மிரட்டும் வழக்கமும் கொண்டுள்ளனர். அவர்களால் பதிவு செய்யப்பட்ட மொபைல் வீடியோக்களை கொல்கத்தா போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்காக முகர்ஜி மற்றும் அகமது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. வழக்கில் மாணவர்கள் உள்ளிட்ட 25 பேர் பட்டியலை எஸ்.ஐ.டி. குழுவினர் தயார் செய்து உள்ளனர்.
இந்த வழக்கில், கல்லூரியின் துணை முதல்வரான டாக்டர் நயினா சாட்டர்ஜியை, மனோஜித் 2 முறை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதுபற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போலீசார் கூறும்போது, 3 பேரும் சட்டம் படித்தவர்கள். அதனால், சில தந்திரங்கள் அவர்களுக்கு தெரியும். எங்களை குழப்புவதற்காக, தவறாக வழி நடத்துவதற்காக முரண்பாடான வாக்குமூலங்களை மூவரும் கொடுத்தனர் என தெரிவித்தனர்.
2017-ம் ஆண்டில் தெற்கு கொல்கத்தா சட்ட கல்லூரியின் முதல்வர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி அதனை சூறையாடினார் என மனோஜித் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. அப்போது அவருக்கு எதிராக போலீஸ் வழக்கு எதுவும் பதிவாகவில்லை என்றபோதும், தவறாக நடந்து கொண்டார் என வந்த தொடர் புகார்களையடுத்து, 2021-ம் ஆண்டில் மாணவர் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க இந்த சம்பவம் அடிப்படையாக அமைந்தது.
2019-ம் ஆண்டு கல்லூரி வளாகத்தில் வைத்து பெண் ஒருவரை மனோஜித் தாக்கி, உடைகளை கிழித்து எறிந்துள்ளார். இதுபற்றி மனோஜித்துக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதன் பின்னரும் தொடர்ந்து அவர் கல்லூரியிலேயே சுற்றி திரிந்து வந்துள்ளார். கல்லூரி வளாகத்தில் அவர் வன்முறையுடன் செயல்பட்ட பல சம்பவங்களில் இதுவும் ஒன்று என தி டெலிகிராப் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, பிக்னிக் சென்ற இடத்தில் குடிபோதையில் ஜூனியர் மாணவி ஒருவரின் காதில் ரத்தம் வரும் வரை கடித்து, பல மணிநேரம் அறைக்குள் பூட்டி சித்ரவதை செய்த அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.
அப்போது, மாணவியின் குடும்பத்தினரை கொன்று விடுவோம் என மிஷ்ரா தரப்பில் மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதனால், அந்த மாணவி பயந்து போயுள்ளார். புகார் தெரிவிக்காமல் அமைதியாகி விட்டார் என அவர் சமீபத்தில் அளித்த வாக்குமூலத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.
2007-ம் ஆண்டு சட்ட கல்லூரியில் படிக்க சேர்ந்த மிஷ்ரா, சரிவர படிக்காமல் வெளியேறி விட்டார். பின்னர் 2017-ம் ஆண்டு மீண்டும் படிக்க சேர்ந்துள்ளார். 2022-ம் ஆண்டில் படிப்பை முடித்துள்ளார்.
அவருக்கு எதிராக, வன்முறை தாக்குதல், பாலியல் துன்புறுத்தல், திருட்டு மற்றும் சூறையாடல் உள்ளிட்ட பல்வேறு தீவிர குற்றச்சாட்டுகள் போலீஸ் ஆவணங்களில் பதிவாகி உள்ளன என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்காளத்தில் பெண் ஒருவர் முதல்-மந்திரியாக பதவி வகித்து வரும் சூழலில், அவருடைய கட்சியின் உறுப்பினர் என்ற பெயரில் கல்லூரி மாணவிக்கு எதிராக கொடூர தாக்குதல் மற்றும் கூட்டு பலாத்கார அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் அந்த மாணவி மூச்சு திணற திணற வலியால் துடித்தபோது, இன்ஹேலர் எனப்படும் மருந்து கொடுத்து 3 பேரும் அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். இதன்பின்னரே சித்ரவதை நீண்டுள்ளது. கடந்த ஆண்டு அரசு மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் கொடூர முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டில் சட்ட கல்லூரி வளாகத்தில் மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பெண் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இந்த கொடூர சம்பவங்கள் தொடர்வது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.