தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை

1 week ago 4

*மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

விருத்தாசலம் : வட்டாட்சியர் அலுவலகத்தில் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துறை சார்ந்த அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் திட்ட பணிகள், இணையவழி பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் வேண்டிய விண்ணப்பங்களின் எண்ணிக்கை, இதுவரை பொதுமக்களுக்கு இணையவழி பட்டா வழங்கப்பட்ட விபரங்கள், நிலுவையிலுள்ள விவரங்கள் மற்றும் அதற்கான காரணங்கள், வீட்டுவசதி வாரியம் சார்ந்து வழங்கப்பட்ட பட்டா விபரங்கள், பட்டா உட்பிரிவு சார்ந்த விவரங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.

இதைதொடர்ந்து அலுவலக பணியாளர்களின் வருகை பதிவேடு, தன் பதிவேடு, பணிப்பதிவேடு, அலுவலகத்திற்கு வரப்பெற்ற கடிதங்கள், ஓய்வூதிய உதவித்தொகை விண்ணப்பங்கள் மற்றும் அது சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், ஆர்டியை மனுக்கள், நீதிமன்ற வழக்கு சார்ந்த மனுக்கள், ஆக்கிரமிப்புகள் குறித்த விபரங்கள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட விபரங்களின் நிலை தொடர்பாக பராமரிக்கப்பட்ட பதிவேடுகளின் உண்மை தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், குறை தீர்க்கும் நாள் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம், முதலமைச்சரின் தனி பிரிவு மனுக்கள் ஆகியவை வாயிலாக பொதுமக்களிடம் பெறப்பட்ட துறை வாரியான மனுக்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர் ஆகியோரின் நலன் சார்ந்த மனுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் நலன் சார்ந்த மனுக்கள் குறித்த விபரங்கள், மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் 15 நாட்களுக்கு மேல் நிலுவையிலுள்ள மனுக்களுக்கான உரிய விளக்கங்களை அளிக்கவும் அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு அதற்கான உரிய ஆவணங்கள் அடிப்படையில் தகுதியிருப்பின் விரைவில் அவர்களுக்கான நலத்திட்டங்கள் சென்றடைய வழிவகை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் உதயகுமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் பலர் உடன் இருந்தனர்.

The post தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article