
பாங்காக்,
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தியா, இலங்கை,வங்காள தேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் மற்றும் பூடான் ஆகிய 7 நாடுகள் சேர்ந்து பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது.
ஆண்டுதோறும் இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்து மாநாடு நடத்தி ஆலோசனை நடத்தப்படும்.அந்தவகையில், இந்த ஆண்டுக்கான மாநாடு தாய்லாந்தின் பாங்காக்கில் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்தமாநாட்டில் கடல்சார், பாதுகாப்பு, சுற்றுலா விண்வெளி ஆய்வு, பயங்கரவாத தடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்தநிலையில் பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தாய்லாந்து புறப்பட்டு சென்றார்.பாங்காக் விமான நிலையத்தில் அவருக்கு தாய்லாந்து இந்திய சமூகத்தினர் சார்பில் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தாய்லாந்து அரசு மாளிகையில் இரு நாட்டு பிரதமர்கள் பங்கேற்கும் இருதரப்பு சந்திப்பு நடைபெறும். அங்கு பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி அரசு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேபாளத்தில் கடந்த 2018-ல் நடைபெற்றது 4-வது உச்சிமாநாட்டுக்கு பிறகு பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக சந்திக்கும் முதல்மாநாடு இதுவாகும்.கடைசிமாநாடு கடந்த 2022-ம் ஆண்டு மார்ச்சில் இலங்கை தலைநகர் கொழும்பில் காணொலி வாயிலாக நடைபெற்றது.
பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து கடல்சார் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். பயணத்தின் முக்கிய அம்சமான பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நாளை காலை கலந்துகொள்கிறார். அப்போது கூட்டமைப்பால் 2030-ம் ஆண்டு பாங்காக் லட்சிய பிரகடனம் ஏற்றுகொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டுக்கிடையே நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, வங்காள தேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனஸ் உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோரர் மற்றும் அவரது மனைவியையும் பிரதமர் மோடி மரியாதை நிமித்தமாக சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், தாய்லாந்து நாட்டு கலைஞர்கள் நிகழ்த்திய அந்நாட்டு தாய்மொழியில் இயற்றப்பட்ட ராமாயணமான ராமாகியனின் நாடகத்தை பிரதமர் மோடி ரசித்து பார்த்தார். அதனைதொடர்ந்து அவர் பேசியதாவது:-
ராமாயணம் உண்மையிலேயே ஆசியாவின் பல பகுதிகளில் உள்ள இதயங்களையும் பாரம்பரியங்களையும் இணைக்கிறது. இதைபோன்றதொரு கலாசாரப்பிணைப்பு வேறெதுவும் இல்லை. இந்தியா - தாய்லாந்து இடையிலான நூற்றாண்டு கால உறவு என்பது ஆழமான கலாசாரம் என்று கூறினார்.
இதனையடுத்து பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
இந்தியா - தாய்லாந்து இடையிலான நூற்றாண்டு கால உறவு என்பது ஆழமான கலாசாரம், ஆன்மீகத்தோடு தொடர்புடையது. இந்தியா - தாய்லாந்து இடையே பரஸ்பர வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக இருவரும் விவாதித்தோம் . இந்தியாவும் தாய்லாந்தும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த ஆர்வமாக உள்ளன. தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ராவும் நானும் விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்கள், கப்பல் போக்குவரத்து, நிதி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆகியவற்றில் இரு நாடுகள் நெருக்கமாக பணியாற்றுவது குறித்து பேசினோம் என பதிவிட்டுள்ளார்.