ஜனாதிபதி திரவுபதி முர்மு கேட்கும் 14 கேள்விகள்

3 hours ago 2

இந்தியாவில் அனைவரும் ஆச்சரியப்படும் அளவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுப்ரீம் கோர்ட்டிடம் 14 கேள்விகள் கேட்டுள்ளார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன அதிகாரம், பல்கலைக்கழக வேந்தர்கள் பதவியில் இருந்து கவர்னரை நீக்க வகை செய்யும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. உடனடியாக கவர்னர் இந்த 10 மசோதாக்களை மீண்டும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். மீண்டும் அந்த மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மீண்டும் அனுப்பும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும் என்ற நடைமுறைக்கு மாறாக, ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பிவிட்டார்.

இதையடுத்து கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இருதரப்பிலும் சந்தித்து பேசி பரஸ்பரமாக சுமுக தீர்வை காணவேண்டும். இல்லையென்றால் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு தீர்வு காணவேண்டிய நிலை ஏற்படும் என்று அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து கவர்னரை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசியும் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவில்லை. இதனால் இந்த வழக்கு, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அளித்த அதிரடி தீர்ப்பு இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வை அளித்தது. எந்தவொரு மசோதா மீதும் ஒரு மாதத்துக்குள் கவர்னர் முடிவெடுக்க வேண்டும். மசோதாவை நிறுத்தி வைப்பதாக இருந்தால் 3 மாதங்களுக்குள் அரசுக்கு தெரிவிக்கவேண்டும். ஜனாதிபதிக்கு அனுப்புவதாக இருந்தாலும் 3 மாதங்களுக்குள் அனுப்பவேண்டும். மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டால் அதை ஜனாதிபதிக்கு அனுப்பமுடியாது. ஒரு மாதத்துக்குள் கவர்னர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என பரபரப்பான தீர்ப்புகளை 415 பக்கங்களில் நீதிபதிகள் அளித்தனர்.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் அந்த 10 மசோதாக்கள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத்தொடங்கியது. இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அரசியல் சட்டம் 143 (1) -ல் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டுக்கு 14 கேள்விகளை கேட்டு பதிலளிக்க கோரியிருக்கிறார். ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் சுப்ரீம் கோர்ட்டால் காலக்கெடு விதிக்கமுடியுமா? அரசியல் சட்டம் 200, 201-வது பிரிவுகள் கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் சிறப்பு அதிகாரம் வழங்குகிறது. அதன்படி, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவோ, நிராகரிக்கவோ காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. இதுபோல 14 கேள்விகளை ஜனாதிபதி சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுப்பும் பதிலைத்தான் நாடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஒரு பிரச்சினைக்கு தீர்வு வந்துவிட்டது என்று நினைக்கும் நேரத்தில் ஜனாதிபதியின் கேள்விகள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மொத்தத்தில் ஜனாதிபதி, கவர்னர் ஆகியோருக்கு காலக்கெடு நிர்ணயிக்கவும், அவர்களது அதிகாரத்தில் தலையிடவும் அரசியலமைப்பு சாசனத்தின்படி சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளதா? என்பதே இந்த 14 கேள்விகளின் சாராம்சமாக உள்ளது. ஆனால் ஜனாதிபதி கேட்கும் கேள்விகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு பதிலளிக்கவேண்டியது இல்லை. 2012-ம் ஆண்டு ராமஜென்ம பூமி வழக்கில் இதுபோன்று ஜனாதிபதி கேட்ட கேள்விகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு பதிலளிக்கவில்லை என்று சென்னைக்கு வந்திருந்த ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.கோபால கவுடா கூறியதையும் கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டியதிருக்கிறது.

Read Entire Article