சென்னை: “நேற்று ஜெயலலிதாவின் மறு உருவம் சசிகலா, இன்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவம் எடப்பாடி பழனிச்சாமி. நாளை யாரோ? என்ன விளையாட்டு இது?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு, அக்கட்சியின் முன்னாள் எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், “எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அவருக்குப் பின்னர் வந்த ஜெயலலிதா, பல்வேறு சோதனைகளைத் தாண்டி ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கியதுடன், அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார். தற்போது அதிமுகவுக்கு கிடைத்துள்ள இறையருள் பழனிசாமி. ஜெயலலிதா சந்தித்த சோதனைகளைப்போல அவரும் பல சோதனைகளை சந்தித்து, ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்கியுள்ளார்.