தாய், மகள் படுகொலை வழக்கில் போலீசாரை தாக்கி விட்டு தப்பிய முக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு: எட்டயபுரத்தில் பரபரப்பு

2 hours ago 1

எட்டயபுரம்: தாய், மகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற முக்கிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரத்தில், கடந்த 3ம் தேதி வீட்டில் இருந்த சீதாலட்சுமி (75), இவரது மகள் ராமஜெயந்தி (45) ஆகியோர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு, அவர்கள் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிந்து, இப்பகுதியில் பதிவான செல்போன் எண்கள் மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் 10க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்தனர். இதில் மேலநம்பிபுரம் முனீஸ்வரன் (25), முகேஷ் கண்ணன் (25), வேல்முருகன் ஆகிய 3 பேர் கஞ்சா போதையில் கொலை, கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து வேல்முருகன், முகேஷ் கண்ணன் ஆகியோரை போலீசார் பிடிக்க முயன்றபோது, தப்பியோடியதில் தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். முக்கிய குற்றவாளியான மேலநம்பிபுரம் முனீஸ்வரன், அயன்வடமலாபுரம் காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் காட்டுப்பகுதியில் 6 டிரோன் கேமராக்களை 12 மணி நேரமாக பறக்கவிட்டு தேடினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அயன்வடமலாபுரத்தில் உள்ள சகோதரி வீட்டிற்கு, 2 நாளாக பசியில் சுற்றிய முனீஸ்வரன் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அவர் சாப்பாடு போட்டுவிட்டு, வீட்டின் கதவை பூட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் போலீசார் விரைந்து சென்று சுற்றிவளைத்து கைது செய்தனர். கொள்ளையடித்த நகைகளை எட்டயபுரத்தில் மதுரை தேசிய நெடுஞ்சாலையோரம் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்ததால், அங்குள்ள எடைமேடை பகுதிக்கு அவரை அழைத்து சென்றனர்.

அங்கு பதுக்கி வைத்திருந்த அரிவாளை எடுத்து குளத்தூர் எஸ்ஐ முத்துராஜ் மற்றும் 3 போலீசாரை வெட்டி விட்டு தப்பியோடியதால் போலீசார், துப்பாக்கியால் சுட்டதில் முனீஸ்வரன் காலில் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்தார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வெட்டுக் காயமடைந்த எஸ்ஐ மற்றும் 3 போலீசாரும் அங்கு சேர்க்கப்பட்டனர். 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் 1.5 கிலோ கஞ்சா, விலை உயர்ந்த பைக், 10 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

The post தாய், மகள் படுகொலை வழக்கில் போலீசாரை தாக்கி விட்டு தப்பிய முக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு: எட்டயபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article