சென்னை: தாம்பரத்தில் விதிகளை மீறி பத்திரப்பதிவு செய்ததால் தமிழக அரசுக்கு ரூ.10 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது நிலத்தின் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்ற பிறகு தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதால், ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. இதனால் இந்தப் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு அதிகரித்து வருகின்றன.
இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணியாற்ற போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. அதில், தாம்பரம் பதிவு அலுவலகத்தில் ஏராளமான போலி பத்திரப்பதிவுகளும், அரசு விதிமுறைகளை மீறி குறைந்த கட்டணம் வாங்கிக் கொண்டு பதிவு செய்து கொடுத்ததாலும் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதனால் பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்பார்வையில், செங்கல்பட்டு பதிவுத்துறை டிஐஜி ராஜ்குமார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவர், தாம்பரம் பதிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தினார். வழக்கமாக இதுபோன்ற பெரிய பதிவு அலுவலகங்களில் சார்பதிவாளரே, பதிவாளராக நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் தாம்பரத்தில் உதவியாளராக உள்ள பாடலிங்கம், பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டு பதிவுகள் நடந்துவந்துள்ளன. இவர், அத்துறையில் செல்வாக்கு மிக்கவராகவும் இருந்துள்ளார்.
இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் நிலத்தின் மதிப்பை குறைத்துக் காட்டி, பதிவு கட்டணத்தை குறைவாக வாங்கி, பதிவு செய்துள்ளார். அதன் மூலம் சுமார் ரூ.10 கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக பதிவு எண் 52/2024, 53/2024, 54/2024 ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட 3 ஆவணங்களை ஆய்வு செய்ததால், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விவிவி கன்ஸ்ட்ரக்சன், சரவணா இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கள் நிலத்தின் மதிப்பை குறைத்துக் காட்டி பதிவு செய்துள்ளன.
இந்த நிறுவனங்களிடம் இருந்து அரசாணைப்படி ஒரு சதவீத கட்டணம் பதிவுக்காக வாங்கியிருக்க வேண்டும். அவ்வாறு வாங்காததால் ரூ.4 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல பல பதிவுகளில் நிலத்தின் மதிப்பை குறைத்துக் காட்டி பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.10 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதேபோல, ஏராளமான போலி ஆவணங்களையும், நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக பல ஆவணங்களையும் போலியாக பதிவு செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, அவர் மீது நிர்வாக ரீதியிலும் குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவராக உள்ள தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்னர் பதிவுத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது, அமைச்சர் மூர்த்தி, இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தேன். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறான ஆட்களால்தான் அரசுக்கும், துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.
இதுபோன்ற ஆட்களை துறையில் வைத்திருப்பது, புற்றுநோய் போன்றது. இதனால் இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கும், போலி ஆவணம் பதிவு செய்துள்ளதால், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் அல்லது சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் கடந்த ஒரு மாதமாக விசாரணை என்ற பெயரில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரை காப்பாற்றும் முயற்சியில் சில அதிகாரிள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
* ரூ.2 கோடி கைமாறியதா?
தாம்பரம் பதிவு பொறுப்பாளர் பாடலிங்கம், உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பதிவுத்துறையில் பணியாற்றிய ஒரு ஐஏஎஸ் அதிகாரியிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். இவரது மனைவியும் பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இதனால், பதிவுத்துறையில் உள்ள பல அதிகாரிகள் பாடலிங்கத்தின் பாக்கெட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
அரசுக்கு ரூ.10 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்று பொதுக்குழு ஆய்வில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தியே நேரடியாக சுட்டிக்காட்டிய பின்னரும் பாடலிங்கம் தன்னுடைய முறைகேடுகளை தொடர்ந்த வண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் திருத்தணி சார்பதிவாளராக பணிபுரிந்து வந்த செல்வகுமார் அனுமதியில்லாமல் பகட்டு மதிப்பு (பேன்சி ரேட்) நிர்ணயம் செய்துவிட்டார் என தகவல் தெரிந்ததும் பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், அவரை பணி நீக்கம் செய்துவிட்டார். ஆனால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுத்திய பாடலிங்கம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதோடு, அவர் தொடர்ந்து அங்கு பணியாற்ற அனுமதிப்பதற்காக ரூ.2 கோடி சில அதிகாரிகளுக்கு கைமாறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post தாம்பரத்தில் விதிகளை மீறி பத்திரப்பதிவு செய்ததால் தமிழக அரசுக்கு ரூ.10 கோடி இழப்பு: போலி ஆவணங்களை பதிவு செய்ததும் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.