சென்னை / தாம்பரம்: தாம்பரத்தில் நடைமேம்பாலப் பணி காரணமாக, மின்சார ரயில்கள் நேற்று காலை முதல் மாலைவரை ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர். சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் தாம்பரம் யார்டில், புதிய நடைமேம்பால பணி காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரைரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே நேற்று முன்தினம் அறிவித்தது.
மேலும், சென்னை கடற்கரை - பல்லாவரம், கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே இருமார்க்கமாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் கூடுவாஞ்சேரி - பல்லாவரம் இடையே மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன.