புதுடெல்லி:‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது 170 தீவிரவாதிகள், 42 பாகிஸ்தான் வீரர்கள் பலியானதாக பாதுகாப்பு வட்டாரங்கள் புது தகவல்களை வெளியிட்டுள்ளன. ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கையானது ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 பொதுமக்களைக் கொன்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி தொடங்கப்பட்டது. இந்திய விமானப்படையும், ராணுவமும் இணைந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளின் ஒன்பது முக்கிய முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில், 170க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் மற்றும் 42 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஒன்றிய அரசின் தரப்பில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மட்டுமே அறிவிக்கப்பட்டது.
மேலும் பாகிஸ்தானில் அந்நாட்டு வீரர்கள் சிலர் இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்தியாவின் பெண் விமானிகள் இந்தத் தாக்குதலில் முக்கிய பங்காற்றியதாகவும், குறிப்பாக பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகத்தை அழித்ததில் பெரும் வெற்றி பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய விமானப்படையின் எஸ்சிஏஎல்பி மற்றும் ஹாம்மெர் ஏவுகணைகளையும், ஸ்கைஸ்டிக்கர் ட்ரோன்களையும் பயன்படுத்திய ராணுவம், பாகிஸ்தானின் துல்லியமாக இலக்குகளை அழித்தன. இந்த நடவடிக்கை, தீவிரவாதத்திற்கு எதிரான கடுமையான எச்சரிக்கையாகவும், பாகிஸ்தானின் ஆதரவுடன் இயங்கும் தீவிரவாத முகாம்களை அழிப்பதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது. இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் இந்த நடவடிக்கையின் வெற்றியை விளக்கி, தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் அல்லது ராணுவ இலக்குகள் தாக்கப்படவில்லை என்றும் கடந்த 7 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
இந்தப் பெண் அதிகாரிகளின் பங்கு, இந்திய ராணுவத்தில் பெண்களின் திறமையையும் தைரியத்தையும் உலகிற்கு காட்டியது. இந்தியாவின் இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் கடந்த 8 மற்றும் 9ம் தேதிகளில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முயன்றது. ஆனால், இந்தியாவின் எஸ்-400 மற்றும் அகாஷ்தீர் வான் பாதுகாப்பு அமைப்புகள் பாகிஸ்தானின் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்களை அழித்து, அவர்களின் முயற்சிகளை முறியடித்தன. இந்தியாவின் இந்த வெற்றி, அதன் மேம்பட்ட வான் பாதுகாப்பு திறனை உலகிற்கு வெளிப்படுத்தியது. மேலும், பிரதமர் மோடி, ‘ஆபரேஷன் சிந்தூர் தீவிரவாதத்திற்கு எதிரான புதிய கொள்கையை நிறுவியுள்ளது’ என்று கூறினார்.
The post ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது 170 தீவிரவாதிகள் 42 பாக். வீரர்கள் பலி: பாதுகாப்பு வட்டாரங்கள் புது தகவல் appeared first on Dinakaran.