நியூயார்க்: தீவிரவாதத்தை பார்த்து அமைதியாக இருக்க மாட்டோம் என்று அமெரிக்காவில் சசி தரூர் ஆவேசமாக கூறினார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடந்த ஆபரேஷன் சிந்தூருக்கு உடனடி ஆதரவு அளித்திருந்த காங்கிரஸ் கட்சி, ஒன்றிய அரசின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுக்களை திசைதிருப்பும் முயற்சி என்று விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் தலைமையிலான குழு கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா சென்றது.
அவர்கள் தீவிரவாதிகளால் மிகக் கொடூரமான முறையில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதையும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும், கடந்த காலங்களில் தீவிரவாதத்தால் இந்தியாவிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் உலக நாடுகளுக்கு எடுத்துரைப்பதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்தியாவின் அமைதி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கான மதிப்புகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இந்தக் குழு வலியுறுத்தும்.
அமெரிக்கா சென்றுள்ள சசி தரூர் தலைமையிலான குழுவினர், அந்நாட்டு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து சசி தரூர் அளித்த பேட்டியில், ‘தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலகிற்கு எடுத்துரைக்க, ஐந்து நாடுகளுக்கு செல்கிறோம். எங்களது குழுவில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்ளனர். தீவிரவாதத்தை பார்த்து நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்’ என்று உறுதியாகக் கூறினார்.
The post தீவிரவாதத்தை பார்த்து அமைதியாக இருக்க மாட்டோம்: அமெரிக்காவில் சசி தரூர் ஆவேசம் appeared first on Dinakaran.