தாமரை கட்சியை கதிகலங்க அடித்தவருக்கு யோகம் வந்திருப்பதாக சொல்கிறார்: wiki யானந்தா

3 weeks ago 5

‘‘புதுச்சேரியில் மலர் கட்சியை கதிகலங்க வைச்சவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க மேலிடம் முன்வந்திருக்கிறதா சொல்றாங்களே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கட்சி மாறுவதில் கைவந்த கலைக்கு சொந்தக்காரரான முழம் குமாரை பற்றித்தான் புதுச்சேரி அரசியலில் இப்போது பேச்சு… அமைச்சர் பதவி ஆசையில் மலர் கட்சிக்கு மாறிய அவர் அந்த கனவிலேயே மூன்றரை வருடங்களை கடந்து விட்டார். இனிமேலும் பொறுத்திருந்தால் அமைச்சர் பதவி கிடைக்காது என்பதால் அதிரடி அரசியலை கையில் எடுத்தார். தனது கட்சி மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களுடன் கைகோர்த்துக் கொண்டு, லாட்டரி தொழிலதிபருக்கும் ஆசை காட்டி புதுச்சேரிக்கு இழுத்து வந்தார். தனி அணிபோல் காட்டியும், பொதுமக்களுக்கு புயல் நிவாரணம் என்ற பெயரில் 2 தொகுதி மக்களுக்கு சில பொருட்களையும் வழங்கியும் மலர் கட்சி தலைமையையே கதிகலங்க வைத்து விட்டாராம்.. இதனால் இப்போது முழம் குமாருக்கு அமைச்சர் பதவி தருவதாக மலர் கட்சி தலைமை உறுதி அளித்து இருக்காம்.. இதற்காக, கட்சியின் மேலிட பொறுப்பாளருடன், முழம் குமாரு தான் சார்ந்த மதசபை தலைவரை சந்தித்து ஆசி பெற்றாராம்.. எதுவாக இருந்தாலும் மலர் கட்சி தலைவர் தேர்வு செய்யப்பட்ட பிறகு தான் அமைச்சர் பதவி வழங்கப்படுமாம்.. ஏற்கனவே அமைச்சர்களாக உள்ள இருவரில் ஒருவரது பதவி காலியாகும் எனவும் பேசப்படுகிறது. அமைச்சர் பதவிக்குப் பதில் கட்சி தலைவர் பதவி வழங்கலாமா எனவும் தலைமை யோசிக்கிறதாம்..’’என்றார் விக்கியானந்தா.
‘‘தென்னை மரத்துல ஒரு குத்து, பனை மரத்துல ஒரு குத்து என செயல்படும் சிவப்பு கவுன்சிலரின் நடவடிக்கையால் தோழமை அமைப்புகள் அப்செட்டில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மான்செஸ்டர் நகரில் பீப் பிரியாணி கடை விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருது.. அமைதியாக இருக்கும் ஊரில் ஏதாவது ஒரு குழப்பதை ஏற்படுத்தி சட்டம் -ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என கூப்பாடு போடுவதற்கு பூ கட்சியும் சில அமைப்புகளும் நீண்ட நாட்களாக திட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க.. ஆனா அவர்களோட எண்ணம் தமிழ்நாட்டுல ஈடேறாது என்பது வேறு கதை. பூ கட்சி கொள்கைகளுக்கு நேர் எதிர் கொண்ட சிவப்பு துண்டு கட்சி கவுன்சிலர் ஒருத்தர் பீப் பிரியாணியில் கை கோர்த்து கொண்டதுதான் எல்லாருக்கும் அதிர்ச்சிய கொடுத்திருக்கு.. பூ கட்சி நிர்வாகியோடு கை கோர்த்துக்கிட்டு பீப் பிரியாணி கடை நடத்துக்கூடாதுன்னு சிவப்பு துண்டு கட்சி கவுன்சிலர் ஒருவரும் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காரு.. இந்த விஷயம் கட்சி தலைமை வரைக்கும் புகாரா போயிருச்சாம்.. இதனால ஆடிப்போன சிவப்பு துண்டு கவுன்சிலர் தனக்கு பாதிப்பு வந்திடக்கூடாதுன்னு நினைச்சு தனது கட்சி நிர்வாகிகளை அழைச்சிட்டு போய் பூ கட்சிக்காரர் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கணும்னு போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்து சமாளிச்சாராம்.. தென்னை மரத்துல ஒரு குத்து, பனை மரத்துல ஒரு குத்துன்னு செயல்படும் சிவப்பு கவுன்சிலரின் நடவடிக்கையை பார்த்து தோழமை அமைப்புகள் எல்லாம் கடும் அப்செட்டில் இருக்கிறாங்களாம்.. உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய நாமளே எதிராக செயல்பட்டால் எப்படி கட்சியை வளர்க்க முடியும்னு உண்மையான சிவப்பு துண்டுக்காரங்க புலம்பிகிட்டு இருக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கனிம வளத்துறையில் டிரான்சிட் பாஸ் வழங்க பெரிய அளவில் மாமூல் வசூலிப்பதாக வந்த புகார் பற்றி சொல்லுங்க பார்ப்போம்..’’ என்றார் பீட்டர் மாமா.
கடைக்கோடி மாவட்டத்தில் ஜல்லி, பாறை பொடிகள் வெளி மாவட்டத்தில் இருந்து கொண்டு வந்து இருப்பு வைத்திருக்க கூடிய ஸ்டாக் யார்டு, 60க்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கிறதாம்.. வெளி மாவட்டத்தில் இருந்து உரிய அனுமதியுடன், இங்கு கனிமங்கள் இருப்பு வைத்திருக்கிறார்கள். இங்கிருந்து சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல கனிம வளத்துறையிடம் டிரான்சிட் பாஸ் என்று தனியாக வாங்க வேண்டுமாம்.. கனிம வளத்துறை ஏற்கனவே வெளி மாவட்டத்தில் இருந்து ெகாண்டு வர கொடுத்த அனுமதி சீட்டை வாங்கி, மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு அதை ரத்து செய்து விட்டு, புதிதாக டிரான்சிட் பாஸ் வழங்க வேண்டும் என்பதுதான் விதிமுறையாம்.. டிரான்சிட் பாஸ் மூலம் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாது. ஆனால் சம்பந்தப்பட்ட துறையில் இருக்க கூடிய அலுவலர் ஒருவர், டிரான்சிட் பாஸ் வழங்க பெரிய அளவில் மாமூல் வசூலில் இறங்கி இருப்பதாக புகார் எழுந்துள்ளதாம்.. உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்கள் பெயரை கூறி வசூல் நடப்பதாக ஸ்டாக் யார்டு உரிமையாளர்கள் கூறுகிறார்கள். இந்த அலுவலருக்கு மாமூல் கொடுக்கும், உரிமையாளர்களுக்கு தனி சலுகை காட்டப்படுதாம்.. அதாவது வெளி மாவட்டத்தில் இருந்து கனிமங்கள் கொண்டு வர கொடுத்த அனுமதி சீட்டை மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் வகையில் கோல்மால் வேலை நடக்கிறதாம்.. ஆனால் மாமூல் கொடுக்காத ஸ்டாக் யார்டு உரிமையாளர்கள் டிரான்சிட் பாஸ் வாங்க போராட வேண்டி உள்ளது என்கிறார்கள். மாவட்டத்தில் ஆட்சியர், கண்காணிப்பாளர் இருவரும் கறாராக இருக்கும் நிலையில், சில அலுவலர்கள் செய்யும் கறை படிந்த வேலை, பெரும் கவலையை ஏற்படுத்தி இருப்பதாக பேசிக்கிறார்கள். இதுகுறித்து கனிம வளத்துறை இயக்குனருக்கும் புகார் போய் இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

The post தாமரை கட்சியை கதிகலங்க அடித்தவருக்கு யோகம் வந்திருப்பதாக சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article