தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் யாரும் தப்ப முடியாது: பிரதமர் மோடி

2 hours ago 2

பாட்னா, 

பீகார் மாநிலம் மதுபானி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள். தாக்குதல் நடத்தியவர்கள் யாரும் தப்ப முடியாது.

கடினமான சூழலில் இந்தியாவுடன் துணை நின்ற நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தாக்குதல் நடத்தியவர்கள், சதி செய்தவர்களுக்கு கற்பனை செய்ய முடியாத அளவு தண்டனை வழங்கப்படும். இந்தியாவின் தன்னம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது. பயங்கரவாதிகளை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவோம்" என்றார்.

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கொடூர தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். இதில் ஒருவர் வெளிநாட்டு பயணி, செய்யது அடில் உசைன் ஷா என்பவர் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி மற்ற அனைவரும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பஹல்காமுக்கு சுற்றுலா சென்றவர்கள். நாட்டையே அதிரவைத்த இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உடனடியாக காஷ்மீர் விரைந்தார்.

அங்கு அவர் முதல்-மந்திரி உமர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்தினார். சவுதி அரேபியாவில் இருந்த பிரதமர் மோடி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். உடனடியாக உயர் மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இன்று அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனையை மத்திய அரசு நடத்த உள்ளது. இத்தகைய சூழலில்தான் பயங்கரவாதிகளை தப்ப விட மாட்டோம் என பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார்.

Read Entire Article