சென்னையில் 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்

3 hours ago 2

சென்னை,

திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு 76-க்குட்பட்ட செல்லப்பா தெருவில் ரூ.1.58 கோடி மதிப்பில் 455 சதுர மீட்டர் பரப்பளவில் புதியதாக கட்டப்படவுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் மற்றும் வார்டு 78-க்குட்பட்ட வி.வி. கோயில் தெருவில் ரூ.1.58 கோடி மதிப்பில் 455 சதுர மீட்டர் பரப்பளவில் புதியதாக கட்டப்படவுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் அமைப்பதற்கான பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த சுகாதார மையங்களில் வரவேற்பு பகுதி, மருந்தகம், ஊசி போடும் அறை, உள்நோயாளி பிரிவு அறை, நலவாழ்வு மையம், ஆய்வக அறை, மருந்து இருப்பு அறை, ஸ்கேனிங் அறை, மருத்துவ ஆலோசனைகளுக்கு 2 அறைகளுடன் 455 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வார்டு 76-க்குட்பட்ட செல்லப்பா தெருவில் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்ட நிதியில் ரூ.17 லட்சம் மதிப்பில் 800 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்குக் கட்டடம் மற்றும் ரூ.15 லட்சம் மதிப்பில் 800 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையத்தினையும் அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மேயர் ஆர்.பிரியா, திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், நியமனக் குழு உறுப்பினர் சொ.வேலு, மாமன்ற உறுப்பினர்கள் எஸ். தமிழ்செல்வி, பரிதி இளம்சுருதி மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read Entire Article