
இஸ்லாமாபாத்,
காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. இன்று மாலை இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டது.
வெறும் 25 நிமிடங்களில், பாகிஸ்தானின் பல பெரிய பயங்கரவாத தளங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழித்து, பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.
இதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 21 பயங்கரவாத முகாம்களில் 9 பயங்கரவாத உள்கட்டமைப்புகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் இந்திய ராணுவத்தினர் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதலை நிறுத்த இந்தியா முன்வந்தால் நாங்களும் தயார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், "பாகிஸ்தான் எந்த விரோதப் போக்கையும் தொடங்காது, ஆனால் தாக்குதலை தொடர்ந்தால் பதிலடி கொடுப்போம். கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவுக்கு எதிராக எந்த விரோத நடவடிக்கையையும் தொடங்க மாட்டோம் என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். இருப்பினும், நாங்கள் தாக்கப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம்.
இந்தியா இதில் பின்வாங்க முடிவு செய்தால், இந்த பதற்றத்தை குறைக்க நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம். இந்த கட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையே திட்டமிடப்பட்டுள்ள எந்தவொரு ராஜதந்திர ஈடுபாடுகள் அல்லது பேச்சுவார்த்தைகள் குறித்தும் எனக்குத் தெரியாது" என்று அவர் கூறினார். இது பாகிஸ்தானின் பின்வாங்கும் செயலாக பார்க்கப்படுகிறது.