ஐதராபாத்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் குவாலியரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 4 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி, வங்காளதேச அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தது. இதில் முக்கியமாக சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் (8 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) விளாசினார். பின்னர் மகமுதுல்லாவின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். மறுபுறம் அதிரடியாக ஆடி ரன் மழை பொழிந்த சஞ்சு சாம்சன், 47 பந்துகளில் 111 ரன்கள் (11 பவுண்டரிகள், 8 சிக்சர்கள்) குவித்தார்.
அடுத்து வந்த ரியான் பராக், 34 ரன்களில் கேட்ச் ஆனார். அரைசதம் நோக்கி முன்னேறிய ஹர்திக் பாண்ட்யா, 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது. வங்காளதேச அணியில் தன்சிம் ஹசன் சாகிப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் சார்பில் முதலாவதாக பர்வேஷ் ஹுசைன் மற்றும் தன்சிட் ஹசன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் பர்வேஷ் ஹுசைன் ரன் ஏதுவும் எடுக்காமல் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து தன்சிட் ஹசன் 15 ரன்களும், அடுத்து களமிறங்கிய ஹுசைன் சாண்டோ 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக லிட்டன் தாஸ் மற்றும் தவ்ஹித் ஹிரிடோய் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் சீரான ஆட்டத்தால் அணி ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. இந்த ஜோடியில் லிட்டன் தாஸ் 42 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மகமதுல்லா 8 ரன்னும், மெஹதி ஹசன் 3 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் அரை சதம் விளாசிய தவ்ஹித் ஹிரிடோய் 63 ரன்களும் தன்சிம் ஹசன் 8 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வங்காளதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளும், மயங்க் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன்மூலம் வங்காளதேச அணிக்கு எதிரான 3-வது டி 20 போட்டியில் 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றதுடன் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.