தவெகவுக்கு வாக்கு சதவீதம் எவ்வளவு? விஜய்யிடம் பரபரப்பு அறிக்கை சமர்ப்பிப்பு

4 hours ago 1

சென்னை,

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகளையும், தாங்கள் பின்பற்ற உள்ள தலைவர்களையும், அதற்கான காரணங்களையும் விஜய் அறிவித்தார். இந்த மாநாட்டைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் அரசியல் களத்தில் உத்வேகம் அடைந்துள்ளன.

அதன் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி, புதிய மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்து வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர், அ.தி.மு.க.வில் இருந்து வந்த சி.டி.நிர்மல்குமாருக்கு துணை பொதுச்செயலாளர், நடிகர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் என முக்கிய பிரமுகர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன.

இந்தநிலையில் ஐபேக் எனும் நிறுவனம் மூலம் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வெற்றிக்கான வியூகம் வகுத்து கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் கடைசியாக 2021-ம் ஆண்டு திமுகவுக்கு வியூகம் வகுத்து கொடுத்தார். அதன் பிறகு எந்த கட்சிக்கும் வியூகம் வகுக்கவில்லை. இந்தநிலையில், விஜய்யை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில், பிரபல தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நேற்று திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மதியம் 3 மணி முதல் மாலை 5.30 வரை என 2½ மணி நேரம் நடைபெற்றது.

அப்போது தமிழக அரசியல் நிலவரம், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? எந்தெந்த கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும்? மக்களின் மனங்களை கவருவதற்காக என்னென்ன பிரசார யுக்திகளை முன்னெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் விவரித்ததாக கூறப்படுகிறது.

விஜய், பிரசாந்த் கிஷோர் சந்திப்பின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. விஜய் உடனான பிரசாந்த் கிஷோரின் சந்திப்பை ஆதவ் அர்ஜுனா ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், தவெக குறித்து பரபரப்பு ஆய்வுஅறிக்கையை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்திடம் பிரசாந்த் கிஷோர் இன்று வழங்கினார். வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு அதிக வாக்குகளை பெற தேவையான நடவடிக்கைகள் குறித்தும ஆலோசிக்கப்பட்டது.

அந்த ஆய்வறிக்கையில், தமிழகத்தில் தவெகவுக்கு 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும். எந்த வயதினர் தவெகவுக்கு வாக்களிப்பார்கள், எந்த வயதினர் தவெகவுக்கு அளிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். எந்த பகுதியில் விஜய் கட்சிக்கு மேலும் செல்வாக்கு இருக்கிறது உள்ளிட்டவை குறித்தும் இடம் பெற்றுள்ளது.மேலும் எந்த பகுதியில் தவெகவுக்கு அதிக வாக்குகள் உள்ளன என்பது அதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், பிரசாந்த் கிஷோர் வழங்கிய பரபரப்பு அறிக்கையை பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் விஜய்யிடம் தந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே தவெகவில் சிறார் அணி, பெண்கள் அணி, திருநங்கைகள் பிரிவு, காலநிலை ஆய்வு பிரிவு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிரிவு என மொத்தம் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Read Entire Article