
சென்னை,
2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் வியூகம் அமைத்து வருகிறது. தவெக கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக 234 தொகுதிகளிலும் தற்போது பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு 70 ஆயிரம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் காலக்கட்டத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் பங்குதான் முக்கியமானது. எனவே பூத் கமிட்டி மாநாடுகளை விஜய் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை தேர்வு செய்ய அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கும் வகையில் சின்னம் இருக்க வேண்டும் என்பதை விஜய் கவனத்தில் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள சுயேச்சை சின்னத்தில் மூன்றை தேர்வு செய்து தங்களுக்கான பொது சின்னத்தை கேட்க த.வெ.க. திட்டமிட்டுள்ளது.
அவ்வாறு பொது சின்னம் ஒதுக்கப்பட்டால் அதனை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார். தி.மு.க.வுக்கு உதயசூரியன், அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை போல தனது கட்சிக்கு மக்களை எளிதில் கவரும் சின்னத்தை பெற வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.