
பெர்லின்,
அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். அதன்படி, நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளுக்கு சென்ற ஜெய்சங்கர் இன்று ஜெர்மனி சென்றுள்ளார். அவர் இன்று ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி ஜோஹன் வெல்பலை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, பஹல்காம் தாக்குதல், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி ஜோஹன் கூறுகையில், ஏப்ரல் 22ம் தேதி இந்தியாவில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலால் நாங்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தோம். இரு நாடுகள் இடையேயான ராணுவ தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிராக தங்களை தற்காத்துக்கொள்ள இந்தியாவிற்கு முழு உரிமை உள்ளது. அதை நாங்கள் ஆதரிக்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையே தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது. அது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.