
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை சந்திக்க நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் வியூகம் அமைத்து வருகிறது. கட்சிக்கு இதுவரை 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்டு வருகிறார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. இதில் 2 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கிறார்கள். அவர்களுக்கு தனிதனியாக அழைப்பிதழ், அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. அழைப்பிதழ் அனுப்பப்பட்டவர்களுக்கு மட்டுமே விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
இதற்கிடையில், தவெகவின் ஆண்டு விழாவில் பங்கேற்பவர்களுக்கான நுழைவு சீட்டு வினியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. நுழைவு சீட்டுகளை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வழங்கினார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 20 நுழைவுச் சீட்டு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விழாவில் கட்சியின் தலைவர் விஜய் முக்கிய முடிவை அறிவிக்க இருக்கிறார். கூட்டணி தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது. மேலும் சுற்றுப்பயணம், தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துதல், உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்துதல் குறித்தும் விஜய் பேச இருக்கிறார்.
இதற்கிடையே, கட்சியின் பொதுக்குழுவையும் நடத்த மாமல்லபுரத்தில் முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இன்னும் 25 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருக்கிறது. எனவே பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு எப்போது நடைபெறும் என்ற விவரத்தையும் இந்த கூட்டத்தில் விஜய் அறிவிக்க உள்ளார்.